
‘அறிவாலயத்தில் வைகோ’
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார்.
திமுக – மதிமுக கூட்டணியில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைகோ பேசியிருக்கிறார்.
‘பத்திரிகையாளர் சந்திப்பு’
வைகோ பேசியதாவது, “ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். இந்த திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்னையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பேசவும் மாட்டேன்.
திமுகவுக்குப் பக்கபலமாக இருப்பேன் எனக் கலைஞரின் இறுதி மூச்சுக்குச் சில நாட்களுக்கு முன்பு அவரிடம் கூறினேன். அதை நேற்று கூட மேடையில் பேசியிருந்தேன் என முதல்வரிடம் கூறினேன்.
இந்துத்துவ சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளைத் தகர்க்கலாம் என நினைத்தால், இமயமலையைக் கூட அசைக்கலாம் திராவிட கொள்கைகளை ஒன்றும் செய்ய முடியாது.
திராவிட இயக்கங்களின் லட்சியங்களும் கொள்கைகளும்தான் என் நரம்பில் ஓடும் குருதி ஓட்டமாக இருக்கின்றன. வருகிற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியைப் பிடிக்கும்.

கூட்டணி ஆட்சி என்பது எங்களின் நோக்கம் அல்ல. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.
மதிமுகவின் பொதுக்குழுவில் வருகிற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.