
‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ , ‘மலைக்கோட்டை வாலிபன்’ போன்ற படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ், அடுத்து சூரியை இயக்குகிறார் என்றும், அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்றும் தகவல் பரவு வருகிறது.
சூரியின் ‘மாமன்’ பட வெளியீட்டு முன் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார்.
விழா மேடையில் அவர், ”சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஒருத்தர் வளர்வதைப் பார்த்து எல்லாரும் சந்தோஷப்பட்டு அதை நம் வளர்ச்சியாகப் பார்க்கிறதுதான் உண்மையான வளர்ச்சினு நினைக்கறேன்.

சூரி அண்ணனின் வளர்ச்சி அப்படிப்பட்ட வளர்ச்சிதான். நானும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னிடம் கதை சொல்ல வருகிற இயக்குநர்களில் பத்து கதை எழுதினால், அதில் ஐந்து கதைகள் சூரி அண்ணனுக்காக எழுதின கதைகளாக இருக்கு. அவரோட வளர்ச்சி பெரிதா இருக்கு” என்று மனம் திறந்து பேசியிருந்தார்.
இந்நிலையில்தான் சூரியின் படத்தை லோகேஷ் தயாரிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
லோகேஷ் இப்போது ராகவா லாரன்ஸை வைத்து ‘பென்ஸ்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் சம்யுத்தா, நிவின் பாலி எனப் பலரும் நடிக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதனை அடுத்த தயாரிப்பாக சூரி படத்தைக் கையில் எடுக்கிறார் லோகேஷ் . மலையாளத்தில் ‘ஆமென்’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ எனப் பல கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லி சேரி, சூரிக்கு ஒரு அழுத்தமான கதை ஒன்றை வைத்திருக்கிறார் என்றும், அந்த கதையை லோகேஷுக்கும், சூரிக்கும் ரொம்பவும் பிடித்துவிட்டது என்றும் அதன் பிறகே இந்த புராஜெக்ட் குறித்த பேச்சு கிளம்பியது என்று சொல்லப்படுகிறது.
லோகேஷ் இயக்கியிருக்கும் ‘கூலி’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருவதால் அதன் வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார். ஆகையால், சூரியின் படம் இன்னமும் பேச்சுவார்த்தை நிலையில்தான் உள்ளது. இப்போதைய நிலவரப்படி உறுதி செய்யப்பட வில்லை என்கிறார்கள். ஆனால், அறிவிப்புகள் வெளியானாலும் ஆச்சரியமில்லை.

தவிர, சூரி இப்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘மண்டாடி’யில் மீனவராக நடித்து வருகிறார் சூரி. இந்தப் படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
கடலில் காட்சிகள் படமாக்க வேண்டியிருப்பதால், அதற்கான ஹோம் ஒர்க் மற்றும் ரிகர்சல்களை மேற்கொண்ட பின்னரே, படப்பிடிப்பில் இறங்கினார் சூரி.
இந்தப் படத்தை ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். சூரியின் ஜோடியாக மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், கலை இயக்குநர் கிரண், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ், டோலிவுட் நடிகர் சுஹாஸ் எனப் பலரும் நடித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
‘மண்டாடி’யை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்திற்கு வருவார் என்றும், லிஜோ ஜோஸ் பெல்லி சேரி படம் உறுதியானதும், அதற்கான அறிவிப்புகள் உடனடியாக வெளியாகும் என்றும் தகவல்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…