
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றிகடனைச் செலுத்துவார்கள். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து பெரிய மாரியம்மனைத் தரிசனம் செய்வார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 30ஆம் தேதி கணபதி ஹோமம் யாகசாலை வேத பாராயணங்களுடன் தொடங்கியது.
1997 ஆம் ஆண்டு இந்தத் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் இன்று காலை 7.35 மணிக்கு நடைபெற்றது.
வேதா பாராயணங்களுடன் தீர்த்த நீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பெரிய மாரியம்மன் கருவறையில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்தப் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், திருக்கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கும்பாபிஷேக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டன.
பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.