• July 2, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமார் சம்பந்தப்பட்ட வழக்கு, நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்திருந்தது. நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அஜித் குமார் தரப்புக்காக ஆஜரான வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் அவர்களிடம் பேசினேன்.

திருப்புவனம் காவல் மரணம் – ஹென்றி திபேன்

“மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணை எப்படி சென்றது? அரசுத் தரப்பில் என்னென்ன வாதங்களை முன்னெடுத்து வைத்தார்கள்? அஜித் குமாரின் மரணம் சட்டத்துக்கு புறம்பானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் நீங்கள் என்னென்ன வாதங்களை முன்னெடுத்து வைத்தீர்கள்?”

“எப்போதுமே இதுபோன்ற வழக்குகளில் நீதிபதிகள் அவசர அவசரமாக விசாரணையை நடத்துவார்கள். ஆனால், இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தரப்பான எங்களை முழுமையாக வாதிட அனுமதித்தார். எங்களின் புகார்களை முழுமையாக செவிமடுத்து கேட்டுக் கொண்டார்.

அஜித்தை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள் என்பதை ஆதாரத்தோடு எடுத்து வைத்தோம். அஜித் குமார் அடித்து துன்புறுத்தப்பட்ட கோவிலின் சிசிடிவி காட்சியை காவல்துறை அழித்ததை வாதமாக முன்வைத்தோம். அதேமாதிரி, விசாரணையின் போது மாஜிஸ்திரேட் மீது ஏற்றப்பட்ட அழுத்தத்தையும் எடுத்துக் காட்டினோம். காலையில் நாங்கள் வாதிட்ட போது பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்து சேர்ந்திருக்கவில்லை. அதை உடனே வாங்கி வருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை ரிப்போர்ட் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் முழுவதும் 44 இடங்களில் காயங்கள் இருப்பதாக ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு நீதிபதியே கூறினார். அரசும் காவல்துறையும் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையான கேள்விகளை கேட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் காவல்துறையை தற்காக்கும் மனநிலையில் இல்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது, அது தவறுதான் எனும் கருத்தையே முன்வைத்தனர். அந்தவகையில் அரசை கொஞ்சம் பாராட்டலாம்.

நீதிபதியும் இந்த விவகாரத்தை இன்னும் விசாரித்து கூடுதலாக ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறார். வருகிற ஜூலை 8 ஆம் தேதிக்குள் விசாரணையை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி. 8 ஆம் தேதி இந்த வழக்கில் இன்னும் முக்கியமான உத்தரவுகளை நீதிபதி பிறப்பிப்பார் என எதிர்பார்க்கலாம்.”

“அஜித் குமாரை காவலர்கள் தாக்குவதைப் போல ஒரு வீடியோ நேற்று வெளியாகியிருந்தது. நீதிமன்றத்தில் அந்த வீடியோவும் முக்கிய ஆதாரமாக இருந்ததா?”

“நிச்சயமாக, நீதிபதியிடம் அந்த வீடியோவையும் காண்பித்தோம். காவலர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்பதற்கு அந்த வீடியோதான் பெரிய சாட்சியாக இருந்தது. அந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனையும் நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து வந்தோம். அவரும் அந்த கோவிலில்தான் பணியாற்றுகிறார். அஜித் குமாரின் தூரத்து சொந்தக்காரர் அவர். அந்த வீடியோவை எடுக்கும்போதே பதைபதைப்புடனும் அச்சதோடும்தான் எடுத்திருக்கிறார். அதனால்தான் அந்த வீடியோ ஒரு சில நொடிகளுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், அதுதான் முக்கிய சாட்சியாகவும் விளங்குகிறது.

சக்தீஸ்வரன் காவல்துறைக்கு எதிராக துணிச்சலாக சாட்சியளிக்க முன்வந்தது பலருக்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. வருகிற நாட்களில் நிறைய பேர் தாமாக முன்வந்து காவல்துறைக்கு எதிராக சாட்சி சொல்வார்கள். நீதிமன்றத்தின் செயல்பாடும் மக்களுக்கு அந்த தைரியத்தை கொடுத்திருக்கிறது.”

“முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்கிறார். நீதிமன்றத்திலும் அரசுதரப்பு பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறது. அரசின் செயல்பாடுகளில் திருப்தி கொள்கிறீர்களா?”

“நீதிமன்றத்தில் அரசுதரப்பின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், முதல்வர் இதுவரை செய்திருப்பவை மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஒரு மண்டபத்தில் வைத்து காவல்துறையோடு இணைந்து திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் பேரம் பேசியிருக்கிறார். 50 லட்சம் கொடுக்கிறோம். விவகாரத்தை சுமூகமாக முடித்துக் கொள்ளலாம் எனப் பேசியிருக்கிறார்.

திருப்புவனம்  அஜித்குமாரின் தாயார்
திருப்புவனம் அஜித்குமாரின் தாயார்

ஆளுங்கட்சியின் பிரதிநிதி இப்படி பஞ்சாயத்து செய்யும் வேலைகளில் இறங்கினால் சட்டம் ஒழுங்கை எப்படி காப்பாற்ற முடியும்? முதல்வர் இதைப் பற்றி எதுவும் பேசவில்லையே? கட்சியினரை அவர் கண்டித்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக இனி இதேமாதிரி செய்யக்கூடாதென முரசொலியிலாவது எழுத வேண்டும். அதேமாதிரி, வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்கிறார். இதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. ஏற்கனவே சிபிஐக்கு மாற்றிய வழக்குகளின் நிலை என்ன? ஸ்டெர்லைட்டிலும் சாத்தான்குளம் விவகாரத்திலும் என்ன நடந்தது? வழக்கை பல ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள். சிபிஐக்கு மாற்றுவதன் மூலம் இந்த வழக்கில் விரைவான நீதி கிடைக்காது என்பதே என்னுடைய அபிப்ராயம்.”

“அப்படியெனில், இந்த விவகாரத்தில் பரிபூரண நீதி என எதை நினைக்கிறீர்கள்?”

“இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றுகிறீர்கள் எனில், இதேமாதிரியாக நடந்த எல்லா காவல் மரணங்களையும் சிபிஐக்கு மாற்றுவீர்களா? எல்லா என்கவுண்டர் வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றுவீர்களா? தமிழக காவல்துறை முழுக்க பாழ்பட்டு போய்விட்டது என்று சொல்லமாட்டேன். இந்த மாதிரியான விவகாரங்களை விசாரிக்கக் கூடிய திறமையான அதிகாரிகள் இங்கே இருக்கிறார்கள். அவர்களிடம் வழக்கைக் கொடுத்து விரைந்து விசாரிக்கலாம்.

வழக்கறிஞர் ஹென்றி திபேன்
வழக்கறிஞர் ஹென்றி திபேன்

8 ஆம் தேதி நீதிமன்றமே முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்குமென்றும் நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடலாம். வழக்கை எந்த அமைப்பு விசாரிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை அதிகாரிகளை நியமித்துக் கூட உத்தரவிடலாம். நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்துப் பார்ப்போம்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *