Doctor Vikatan: என் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். இப்போது நான் 8 மாத கர்ப்பிணி. வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எல்லா வேலைகளையும் வழக்கம்போல செய்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் நிகழுமா? அம்மாவுக்கு சிசேரியன் ஆனதால் எனக்கும் சிசேரியன்தான் ஆகும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
எட்டு மாத கர்ப்பத்திலும் எல்லா வேலைகளையும் செய்வதாகவும், வேலைக்கும் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மையிலேய மிகவும் நல்ல செய்தி. ஏனெனில், இன்றைய தலைமுறை பெண்கள் பலரும் சொகுசான வாழ்க்கையையே வாழ விரும்புகிறார்கள். கர்ப்பகாலத்திலும் அவர்களிடம் அதே மனநிலையைப் பார்க்க முடிகிறது.
உண்மையில் கர்ப்பகாலத்தை நினைத்து அவ்வளவாக பயப்படத் தேவையில்லை. கருவில் இருக்கும் குழந்தையானது மிகமிக பத்திரமாக, பாதுகாப்பாகவே இருக்கும். சில பெண்களுக்கு மருத்துவர்களே ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியிருப்பார்கள். அந்தப் பெண்கள் மட்டும் அதிக வேலைகள் செய்யாமல், உடலை வருத்திக்கொள்ளாமல் ஓய்வில் இருந்தால் போதும். உதாரணத்துக்கு, நஞ்சுக்கொடி கீழே இருப்பதாகச் சொல்லப்பட்ட கர்ப்பிணிகள், ஏற்கெனவே கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆன அனுபவம் உள்ளவர்கள், ப்ளீடிங் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவரால் எச்சரிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மருத்துவர்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மற்றபடி எல்லோருக்கும் அது அவசியமில்லை.

நீங்கள் சாதாரணமாக வேலை செய்பவராக இருந்தால் உங்களுடைய வழக்கமான வேலைகளை எப்போதும்போல தொடரலாம்.
அதிக எடை தூக்குவது, உடலை வருத்திச் செய்கிற வேலைகளை மட்டும் தவிர்க்கவும். வேலை செய்வதாலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.
உங்கள் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள் என்பதால் உங்கள் விஷயத்திலும் அப்படித்தான் நிகழ வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுடைய உடல் அமைப்பு வேறு, உங்கள் அம்மாவின் உடல் அமைப்பு வேறு.
வலியைத் தாங்கும் திறன் உங்களுக்கு உங்கள் அம்மாவைவிட சற்று அதிகமாக இருக்கலாம். ‘எபிடியூரல் அனஸ்தீசியா’ (Epidural anesthesia) கொடுத்து உங்கள் வலியைக் குறைக்கச் செய்யும் வசதிகள் இன்று உள்ளன. அதாவது 50 முதல் 60 சதவிகித வலியை இதன் மூலம் குறைக்கலாம். எனவே, அம்மாவின் சிசேரியனை நினைத்து தேவையின்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.