• July 2, 2025
  • NewsEditor
  • 0

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

“ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொரு அணியினரும் வீடு வீடாக சென்று, ‘எதற்காக நாம் ஒன்றிணைக்க வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எவ்வாறு வஞ்சிக்கிறது. நிதியை தர மறுக்கிறது. கீழடி விவகாரத்தையும் தமிழர்களின் கலாசாரம் தொன்மையை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது என்பதையும் எடுத்துக் கூறி அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று இயக்கம் இன்று முதல் தொடங்கி 45 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இதில், நாங்கள் அனைத்து தரப்பு பொது மக்களையும் மட்டுமல்லாமல், அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளுக்கும், உறுப்பினர்கள் வீடுகளுக்கும் சென்று அவர்களிடமும் இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைப்போம்.

ragupathi

அவர்களுக்கு இந்த நோக்கம் பிடித்து இருந்தால் தி.மு.க-வில் இணையலாம். ஆனால், யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். இந்த இயக்கமானது தி.மு.க-வின் பிரசார இயக்கம் அல்ல. தமிழ்நாட்டிற்கான பிரசார இயக்கம். தமிழகத்தின் முழக்கம். தமிழன் தன்மானத்தை, மானத்தை கலாசார பண்பாடு ஆகியவற்றை இழந்து விடக்கூடாது என்பதற்கான முழக்கம் தான் இது. இதில், பிடித்தவர்கள் இணையலாம். பிடிக்காதவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தி இதில் இணைக்க மாட்டோம்.

எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல்

என்றைக்கும் நாங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று சொல்வதில்லை. எதிரிகள் உள்ளனர். ஆனால், இங்கு எதிரிகளுக்கு தைரியம் இல்லை என்று தான் கூறுகிறோம். அந்த எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் எங்களுக்கு உள்ளது.

திருப்புவனம் சம்பவம் துரதிஷ்டவசமானது. இதில், காவல்துறை எந்த அளவுக்கு பொறுப்பு என்பது விசாரணையில் தான் தெரியும்.

பா.ஜ.க-வை விட்டு வெளியேற அ.தி.மு.க-விற்கு முதலில் தைரியம் வரட்டும். அத்தைக்கு மீசை முளைக்கட்டும். சித்தப்பாவாக வரட்டும். அதற்குப் பிறகு பார்ப்போம். அவர்கள் சொல்வதைக் கேட்போம். எங்களுக்கு கொத்தடிமைகளைப் பற்றி கவலையில்லை.பா.ஜ.க கூறும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்பது போன்ற திட்டம் இல்ல இந்த இயக்கம். பி.ஜே.பி கொண்டு வருவது சுயநலமான ஒன்று. அதில் பொது நலம் கிடையாது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான கலாசாரம், பொதுவான மொழி என்பது கிடையாது. ஒவ்வொன்றிலும் நாம் வேறுபட்டுள்ளோம். ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இந்தியா.

தமிழருடைய நாகரிகம் நமக்கு சொந்தமானது. தமிழருடைய இனம் நம்முடைய இனம். தமிழ் மொழி நம் மொழி. இவை எல்லாம் நமக்கு சொந்தமானவை. இதை முன்னெடுத்து தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

திருப்புவனம் லாக்கப் டெத்:

தற்போது, லாக்கப் டெத் நடந்தால் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். சில சம்பவங்களில் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. அதை நாங்கள் இல்லை என்று கூறவில்லை.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் போன்ற வழக்குகளில் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் உயிரோடு உள்ளாரா, இல்லையா எங்கு உள்ளனர் என்பது குறித்து ஆட்கொணர்வு மனு அளித்து அதன் பின்னர் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த சம்பவத்தில் அப்படி இல்லை.

திருப்புவனம் லாக்கப் டெத் - உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்
திருப்புவனம் லாக்கப் டெத் – உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்

உயர்நீதிமன்ற விமர்சனம்

தமிழ்நாடு அரசு இதுபோன்ற வழக்குகளில் முறையாக கையாளவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது கேட்க்கிறீர்கள். உயர்நீதிமன்ற விமர்சனத்திற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

தவறு செய்யும் யாரையும் நாங்கள் காப்பாற்ற வில்லை. அது, காவல்துறையாக இருந்தாலும் சரி அவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவ்வாறு அவர்கள் கூறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும். ஆனால், நம்முடைய காவல்துறையை போன்று சிறப்பாக செயல்படக்கூடிய காவல்துறை எங்கும் இல்லை.

`ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தாலும்..’

ஒருவர் நகையை காணவில்லை என்று காவல்துறையிடம் கூறுகிறார். இவரிடம் தான் நகை உள்ளது என்றும் கூறுகிறார். அதன் அடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அழைத்து காவல்துறையின் விசாரணை செய்கின்றனர். அங்கு சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது என்று பரவும் தகவலுக்கு விளக்கம் கேட்கிறீர்கள்.

லாக்கப் டெத்…

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, ஐ.பி.எஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி இந்த வழக்கில் யாரையும் நாங்கள் விட்டு வைக்கப் போவது கிடையாது. அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வழக்கை நீர்த்துப் போவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவது பொய்க்குற்றச்சாட்டு. எங்களுக்கு அது அவசியம் இல்லை.

இதேபோன்றுதான் அண்ணா பல்கலைக்கழக வழக்கிலும் விசாரணை நீர்த்துப்போகும் என்று கூறினார்கள். உடனடியாக விசாரணை முடிந்து தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டோம்.

இதே போல் இந்த வழக்கிலும் ஐந்து அல்லது ஆறு மாதத்திற்குள் உரிய தண்டனையை பெற்றுத் தருவோம்.

`தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக..’

1971-ம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது கிடையாது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை தவிடு பொடியாக்கி வரும் 2026-ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமையும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *