• July 2, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலம் திருச்சூர் புதுக்காடு அருகே உள்ள மட்டனூரைச் சேர்ந்தவர் அனீஷா(22). லேப் டெக்னீசியனான இவருக்கும் ஆம்பல்லூரைச் சேர்ந்த பபின்(25) என்ற இளைஞருக்கும் முகநூல் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது.

திருமணம் செய்துகொள்ளும் முடிவின் காரணமாக நெருக்கமாக இருந்ததால் 2021 நவம்பர் மாதம் ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அனீஷா. பெற்றெடுத்த குழந்தையை கொலைசெய்த அனீஷா, உடலை தனது வீட்டுக்கு பின்பக்கம் உள்ள இடத்தில் குழிதோண்டி புதைத்தார்.

பபினுடனான நெருக்கம் தொடர்ந்ததால் இரண்டாவது முறையாக கர்ப்பமான அனீஷா 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை கொலைசெய்து வேட்டியில் சுற்றி பையில் போட்டுவைத்தார். மறுநாள் குழந்தையின் சடலத்தை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று காதலன் பபினிடம் கொடுத்தார். குழந்தையின் உடலை தனது வீட்டுக்கு அருகே புதைத்தார் பபின்.

இந்த நிலையில் அனீஷாவுக்கு வேறு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பபின் அதுபற்றி அவரிடம் கேட்டார். இதனால் இருவருக்கு வாக்குவாதமும், கருத்துவேறுபாடும் ஏற்பட்டது. காதலி தன்னைவிட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்துவிடுவாரோ என நினைத்த பபின், அனீஷா 2 குழந்தைகளை கொலை செய்த சம்பவம் குறித்து புதுக்காடு காவல் நிலையத்துக்கு நேரில் சென்று தகவல் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையின்போது அனீஷா

இதையடுத்து அனீஷா மற்றும் பபின் மீது கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தைகளை பெற்றெடுத்தது மற்றும் கொலையை அரங்கேற்றியது குறித்து அனீஷா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனீஷா அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “பபினுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கர்ப்பமானேன். வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பத்தை மறைக்க வயிற்றில் துணி கட்டியபடி வெளியே சென்றுவந்தேன். பிரசவம் குறித்து யூ டியூப் பார்த்து தெரிந்துகொண்டேன். யூ டியூப்பில் கிடைத்த தகவல் அடிப்படையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தேன்.

நான் லேப் டெக்னீசியன் படித்ததும் சுயமாக பிரசவம் செய்ய உதவியாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குச் சென்று குழந்தையை பெற்றெடுத்தேன். பிறந்ததும் குழந்தை அழுததைத் தொடர்ந்து சத்தம் வெளியே கேட்காமல் இருக்க முகத்தை பொத்தி வைத்தேன்.அதில் மூச்சுத்திணறி குழந்தை இறந்தது. பின்னர் வீட்டுக்கு பின்னால் ஒரு அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்தேன்.

கைதான பபின்

இரண்டாவது குழந்தை பெற்றெடுத்ததும் மூச்சை நிறுத்தி வேட்டியில் சுற்றி வைத்தேன். குழந்தையின் உடலை மறுநாள் பையில்  வைத்து காதலனின் வீட்டுக்கு கொண்டு கொடுத்தேன். அவர் தனது வீட்டுக்கு அருகே இரண்டாவது குழந்தையை புதைத்தார். இரண்டு குழந்தைகளின் ஆத்மாக்களும் சாந்தியடையவும், பாவம் தீரவும் சில கிரியைகள் செய்வதற்காக முதல் குழந்தையின் எலும்புகள் வேண்டும் என என்னிடம் கேட்டு வாங்கினார் பபின். பின்னர் அந்த எலும்புகளை காவல் நிலையத்தில் காட்டி என்னை சிக்கவைத்துவிட்டார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பபினின் மொபைல் போனில் முதல் குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. அனீஷாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது போனை உடைத்து எறிந்துள்ளார் பபின். அவரது போனை மீட்கமுடியவில்லை என்பதால் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்க முடியவில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *