
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணிக்கு தனியாக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுவைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி மதுபாட்டில்களை விற்கும்போது ரூ.10 கூடுதலாக பெற்றுக்கொண்டு, காலி பாட்டில்களை ஒப்படைத்தால், அந்த ரூ.10 திருப்பிக் கொடுக்கப்படும். இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு டாஸ்மாக் கடைகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக பணியாளர்களை நியமிக்கக் கோரியும், காலி மதுபாட்டில்களை சேகரித்து வைக்க தனி இடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரியும், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.