
“ஏஏஏஏஏஏஏஏங்க…. தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்… ஒலகத்துலயே கிடையாது” என ஒன்மேன் ஆர்மியாய், கூமாபட்டியை வைரலாக்கிய இளைஞர் தங்கபாண்டி, ‘இனி சென்னையில் வசிக்கப்போகிறேன்’ என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறார்.
“கூவிக் கூவி கூமாபட்டிக்கு கூப்ட்டுக்கிட்டிருந்த நீங்க சென்னையில் தங்கப்போறேன்னு சொல்றீங்களே? அப்போ, கூமாபட்டியை யார் பாத்துக்குவாங்க?” என்றோம்”
“நான் சென்னையில் தங்கப்போறேங்கிறது உண்மைதான். ஆனா, நிரந்தரமா கிடையாது. அப்பாவோட மனதிருப்திக்காக கொஞ்சநாள் சென்னைவாசியாய் மாறலாம்னு இருக்கேன். ஏன்னா, எனக்கு அச்சுறுத்தல், மிரட்டல், ஏன்… என் உயிருக்கு ஆபத்துக்கூட வரலாம்னு அப்பா,அம்மா ரொம்பவே பயப்படுறாங்க. குறிப்பா, எங்கப்பா தினமும் என்னை நினைச்சு வேதனைப்படுறார். ஏன்னா, வீட்டுக்கு நான் தான் மூத்த பையன். எனக்கு அடுத்ததா ரெண்டு தம்பிங்க, ஒரு தங்கச்சி இருக்காங்க. அவங்க எல்லாரோட எதிர்காலமும் என் கைலதான் இருக்கு.
என்னோட குடும்பம் ஏழ்மையான குடும்பம். அப்பா செங்கல் சூளையிலும் கறிக்கடையிலும் வேலைபார்த்துதான் எங்களை படிக்க வெச்சாரு. கறிக்கடையில் நின்னுக்கிட்டே வேலை பார்த்ததால அப்பாவுக்கு கால்ல நீர்க்கட்டி வந்துடுச்சு. அதனால, குடும்பத்தை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.
ஏற்கெனவே, செய்யாத ஒரு குற்றத்துக்காக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சு, மூன்று ஆண்டுகளா மன உளைச்சலில் இருக்கேன். என் தம்பி நியூ இயர் கொண்டாடும்போது பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் என் தம்பிக்கும் கைகலப்பு ஆகிடுச்சு. அந்த ஸ்பாட்டிலேயே நான் கிடையாது. நான், என் தங்கச்சி எல்லாம் தூங்கிக்கிட்டிருந்தோம். பார்த்தா எங்க பேரையும் சேர்த்து பக்கத்து வீட்டுக்காரங்க புகார் கொடுத்துட்டாங்க.
என் தங்கச்சி பி.ஏ. ஆங்கிலம் படிச்சுக்கிட்டிருக்கு. அதுவும் இப்போ எங்கக்கூட கோர்ட்டுக்கு அலைஞ்சுக்கிட்டிருக்கு. நான் பி.எட் ஆசிரியர் பயிற்சி முடிச்சிருக்கேன். இந்த வழக்கால வேலைக்குப் போக முடியல. அதனால, 10 எருமை மாடுங்க, 15 ஆடுகளை மேய்ச்சுட்டு இருக்கேன். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கூமாபட்டி பிளவக்கல் அணையை விலங்குகள் நடமாட்டம் இருக்கிறாதல அரசு மூடிடுச்சு. இப்போ, நான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கினதால, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பூங்கா அமைப்பதற்கான முன்னெடுப்புகளை துரிதப்படுத்தியிருக்காங்க. அதுல, எனக்கு சந்தோஷம்தான்.
கூமாபட்டி சுற்றுலா தலமாக ஆக்கப்பட்டால் எங்க ஊர் மக்களோட பொருளாதாரம் வளர்ச்சியடையும். கிராமவாசிகளுக்கு சுற்றுலா மூலமா வேலைவாய்ப்பும் உருவாகும். இதனால, எங்க ஊர் நாட்டாமைல்லாம் ‘உன்னால நம்ம ஊருக்கே பெருமை. ஒத்த ஆளா சாதிச்சுக்காட்டிட்ட’ன்னு எனக்கு பொன்னாடைல்லாம் போர்த்தி பாராட்டுனாங்க.

அதேநேரம் நான் அரசை எதிர்த்துக்கிட்டு தனிமனுஷனா கூமாபட்டியை சீரமைக்கலன்னு பேட்டி கொடுத்ததால அரசியல்வாதிகளால எனக்கு அச்சுறுத்தல் ஏற்படும்னு என்னோட அப்பா ரொம்பவே பயப்படுறார். ஏற்கெனவே, வேலை வாய்ப்பில்லாம பொய் வழக்கால அலஞ்சுட்டிருக்கேன். இப்போ இதுவேறயான்னு கேட்கிறார் அப்பா. அவரோட பயம் நியாயம்தானே? எனக்கும் இந்த ஊருல இருந்தா அச்சுறுத்தல் ஏற்படும்ங்கிற அச்சம் இருக்கு. அதனால, அப்பா பேச்சைக் கேட்டு சென்னையில் ஒருமாசம் தங்கப்போறேன் . அடுத்தவாரம் முதல் நான் சென்னைவாசிதான்.
சென்னைல இருந்தாலும் என் சிந்தனை; உயிர் எல்லாம் கூமாபட்டியைத்தான் சுற்றிக்கிட்டிருக்கும் . கூமாபட்டியின் வளர்ச்சியைத்தான் நினைச்சுட்டிருப்பேன். ஒருமாசம் கழிச்சு கூமாபட்டிக்கு வந்து திரும்பவும் வழக்கமான பணிகளை செய்ய ஆரம்பிச்சுடுவேன். ஊரை மீண்டும் வைரலாக்குவேன். சென்னை வாழ்க்கை அப்பாவோட நிம்மதிக்காக. அவ்ளோதான்!” என்று அப்பா சொல்லை மீறாத மகனாய் செயல்மூலம் பாசத்தை வெளிப்படுத்தவிருக்கும் தங்கபாண்டியிடம் “ஏஏஏங்க…. ஏங்ஙன்னு நீங்க பேசினது ட்ரெண்ட் ஆகிடுச்சே? நிச்சயம் சினிமா வாய்ப்புகள் இந்நேரம் வந்திருக்குமே?” என்றோம்.

“எனக்கு சினிமாவில் நடிக்கணும்ங்கிற விருப்பம் இருக்குதான். வாய்ப்பு வந்தா நிச்சயம் நடிப்பேன். ஆனா, இப்போ எல்லோரும் கூமாபட்டிக்கு வந்து பேட்டி எடுத்துக்கிட்டே இருக்கிறதால வர்ற போனை அட்டென்ட் பண்ணக்கூட முடியல. யார் கால் பண்றாங்கன்னு தெரியவும் மாட்டுது. ஆனா, என்னோட ‘ஏஏஏஏங்க…’ செம்ம வைரல் ஆகி எல்லா இடத்திலும் பாட்டாவே பாடிட்டிருக்காங்கங்கிறதுல ரொம்பவே சந்தோஷம்!” என்கிறார் உற்சாகத்துடன்.