• July 1, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்புவனத்தில் போலீசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 5 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மானாமதுரை டி.எஸ்.பி-யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு பல தரப்பிலும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான அறிக்கைக்குப்பின் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

“காவல்துறையின் உயரதிகாரிகள் அனுமதியின்றி தனிப்படையினர் இரண்டு நாட்களாக அஜித்குமாரை விசாரித்திருக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் சிவகங்கை எஸ்.பி உள்ளிட்ட உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சாதாரண மனிதர்களும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் பெறுவதற்கு வழிவகைகள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது விசாரணைக்கு சென்ற நபர் இறக்கும்படியாக தாக்கியது ஏன்? காவல்துறையினருக்கு இவ்வளவு அதிகாரத்தை வழங்கியது யார்? மாஜிஸ்திரேட்டுக்கு ஏன் உடனடியாக பிரேதப்பரிசோதனை அறிக்கை அனுப்பப்படவில்லை? காவல்துறை, நீதித்துறையினரின் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை விசாரிக்க ஏன் அனுமதிக்கப்படவில்லை? விசாரணை என்ற பெயரில் ஏழைகளை தாக்குவதற்குதான் காவல்துறையினர் உள்ளார்களா? பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழஙகுவதுதான் அவர்களின் கடமை. அப்படியிருக்கும்போது அவர்களின் கடமையை மறந்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்றனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை மதியத்துக்கு பின்பும் தொடர்ந்து நடந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *