
சென்னை: “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை.