
இந்தூர்: கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத் நேற்று முன்தினம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
யூ டியூபர் பிரியம் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்தில் வீட்டின் போர்டிகோ காண்பிக்கப்படுகிறது. அந்த போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. அடுத்ததாக வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறது.