
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தவரின் நகை காணாமல் போனதானது. இதையடுத்து, அந்தக் கோயிலின் காவலாளியான அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.
விசாரணையின்போது, அடி தாங்க முடியாமல், அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போலீசாரோ, அஜித் குமார் தப்பிக்க முயன்றபோது, கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறுகின்றனர்.
தற்போது அஜித்குமாரின் மரணம் குறித்து போலீஸார் தாக்கல் செய்துள்ள எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளதாவது…
“மடப்புரம் கோவிலில் சாமி கும்பிட வந்த நிக்கிதா என்பவரின் சிவப்பு கலர் காரை பார்க் பண்ணுவதாகச் சொல்லி சாவியை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வாங்கியுள்ளார்.
அந்தக் காரில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணம் 2,500யை அவர் எடுத்துவிட்டதாகப் புகார் வர, அந்த நபரை விசாரிக்குமாறு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் 27.6.25-ம் தேதி, இரவு சுமார் 9.30 மணிக்கு, திருப்புவனம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமாரை விசாரிக்க, சரவணன் என்பவர்தான் 27-6-25 அன்று காலை சுமார் 09.45 மணியளவில் அந்தக் காரினை எடுத்து நிறுத்தியதாகக் கூறியுள்ளார்.
விசாரணையில், சரவணன் என்ற நபர் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. பின்பு, அருண் என்பவர்தான் காரை பார்க்கிங் செய்தார் என்று அஜித்குமார் கூறியதால், அருண் என்பவரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். அவர் அதை முற்றிலும் மறுத்து கார் சாவியை அஜித்குமார் தான் வைத்திருந்தார் என்று கூறினார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர், அஜித்குமாரை விசாரிக்க, தன்னுடைய தம்பியிடம் திருடிய நகைகளைக் கொடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார். அவரது தம்பியான நவீன்குமாரை விசாரிக்க, தனது அண்ணன் பொய் சொல்வதாகவும், அவருடைய நடவடிக்கை சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக, அஜித்குமாரை மீண்டும் விசாரிக்க, அவர் காரை இரண்டாவது முறையாக பார்க்கிங்கில் இருந்து எடுத்து வந்தது தினகரன் என்ற நபர் என்று கூறியதால், தினகரன் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோரை விசாரித்திருக்கிறார்கள்.
அவர்களும் அஜித்குமார் சொல்வது முற்றிலும் பொய் என்று கூறியதால், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமாரை நன்றாக விசாரித்து, திருடிய நகையை மீட்குமாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே அஜித்குமார் மற்றும் தினகரன் ஆகியோரின் செல்பேசி அழைப்புகளை சைபர் கிரைம் மூலம் வாங்கி மீண்டும் விசாரித்திருக்கிறார்கள். அதன் பின்னர், அஜித் கூறியதன் பேரில், அஜித்குமாரின் நண்பர்கள் பிரலின் மற்றும் வினோத் ஆகியோரை விசாரிக்க, ‘நடந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை’ என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அஜித்குமார் தான் மேற்கண்ட திருட்டைச் செய்திருப்பார் என்றும் கூறியுள்ளனர்.
பின்னர், அஜித்குமார் உண்மையை ஒப்புக் கொண்டு நகையைத் திருடியதாகவும், திருடிய நகையை திருப்புவனம் மடப்புரம் கோவில் அலுவலகம் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஒளித்து வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அங்குச் சென்று நகைகளைத் தேடியபோது கிடைக்கவில்லை.
உடனே அவர் போலிஸாரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில், ஓடிய போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். மீண்டும் அவரைப் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கும் போது, அஜித்குமார் மீண்டும் தப்பி ஓடி கீழே விழுந்து விழுந்திருக்கிறார். அவருக்கு வலிப்பு வந்துள்ளது.

இதனையடுத்து, திருப்புவனம் மருத்துவமனைக்குத் தலைமை காவலர் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர், அஜித்குமாரை சிவகங்கை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அங்கும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கூறியதால், ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே, இரவு சுமார் 11.15 மணிக்கு, மருத்துவர் பரிசோதித்து விட்டு, அஜித்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழப்பு என்று போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.