
மும்பை: மகாராஷ்டிர தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில் கடந்த ஏப்ரலில் மும்மொழி கொள்கை அமல் செய்யப்பட்டது.
இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 3-வது கட்டாய மொழி பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்திவைக்கப்பட்டது.