• June 27, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, மென்மையான அழகோட, நல்ல நடிப்புத்திறமையோட வலம் வந்தவங்க நடிகை சுமித்ரா. அவங்களைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..!

நடிகை சுமித்ரா

சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுல ஒண்ணு ‘நிழல் நிஜமாகிறது.’ படம் வெளிவந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆகப்போகுது. ஆனா, ஈகோ பிடிச்ச ஓர் இளம்பெண் கேரக்டருக்கு சுமித்ரா பண்ண அந்த இந்துமதி கேரக்டர் தான் இன்னிக்கு வரைக்கும் மைல் ஸ்டோன்.

தன்னோட காதலை ஈகோவுக்கு உள்ள மறைக்கிற சுமித்ராவோட கேரக்டர் இன்றைய ஜெனரேஷனுக்கும் ஒத்துப்போகும். சிரிப்பே வராத கடுகடு முகம், அதை பாதி மறைச்ச கண்ணாடி, அந்த கண்ணாடிக்குள்ள இருந்த கண்கள்ல தெரிகிற ஆட்டிடியூட், மூக்கும் உதடும் துடிக்கிற கோபம்னு அந்தப் படத்துல மிரட்டியிருப்பாங்க சுமித்ரா. இவங்களோட சினிமா பின்புலம் என்னன்னு தேடினா, அப்படி எதுவுமே இல்லைங்கிறது ஆச்சரியமா இருக்கு.

நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா

சுமித்ராவோட சொந்த ஊர் கேரளாவுல இருக்கிற திருச்சூர். அப்பா ராகவ நாயர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துல வேலைபார்க்க, அம்மா ஜானகி குடும்பத்தலைவி. சுமித்ராவுக்குப் பின்னாடி மூணு தம்பிங்க. அவங்கப்பாவோட வேலை காரணமா, விசாகப்பட்டினத்துக்குப் போறாங்க. ஆனா, சென்னையில இருக்கிற அம்மா வழி தாத்தா வீட்டுக்கு ஒவ்வொரு சம்மர் ஹாலிடேஸுக்கும் வந்திடுவாங்களாம் சுமித்ரா. அப்படி ஒரு வருசம் வந்தப்போ தான் சுமித்ராவுக்கு மலையாளப்பட வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அத பத்தி அவங்களே ஒரு பேட்டியில சொல்லி இருக்காங்க.

”எங்க தாத்தா வீட்டுப் பக்கத்துல ஒரு டீக்கடை இருந்துச்சு. அங்க டீ ரொம்ப நல்லா இருக்குமாம். அப்பா, சென்னைக்கு வர்றப்போ அந்த டீக்கடையில டீ குடிக்கப் போவாரு. அப்படிப் போறப்போ, அங்க டான்ஸ் மாஸ்டர் முருகப்பனை மீட் பண்ணியிருக்காரு. அவர் கே.ஆர். விஜயா மேடமுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தவர். அவரும் எங்கப்பாவும் அடிக்கடி அந்த டீக்கடையில மீட் பண்ண, நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. அவர் ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ எனக்கு 14 வயசு. விளையாடிட்டு இருந்த என்னைப் பார்த்துட்டு ‘உங்க பொண்ணுகிட்ட ஒரு நடிகைக்கான லட்சணம் இருக்கு. மலையாளப்படம் ஒண்ணுல ஒரு தங்கச்சி கேரக்டருக்கு நடிகை தேடிக்கிட்டிருக்காங்க. உங்க பொண்ணை நடிக்க வைக்கிறீங்களா’ன்னு கேட்டார்.

நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா

ஆனா, எங்கப்பா அதுக்கு ஒத்துக்கவே இல்ல. ஆனா, முருகப்பன் மாஸ்டர் கிட்டத்தட்ட எங்களைக் கட்டாயப்படுத்தி அந்தப்படத்தோட டைரக்டர் ஆஃபீஸுக்குக் கூட்டிப்போனார். ஆனா, அங்க என்னை எந்த கேரக்டர்ல நடிக்க வைக்கிறதுக்காக கூட்டிக்கிட்டு வந்தாரோ, அதே கேரக்டருக்கு ஏற்கெனவே ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி வெச்சிருந்தாங்க. இவர் என்னை அறிமுகப்படுத்தினதும், என்னை ஒருமுறை பார்த்தாங்க. உடனே எனக்கு டிரெஸ் அளவு எடுக்கச் சொன்னாங்க. மறுநாள் ஷூட்டிங் வர சொல்லிட்டாங்க. ஐயோ… அவ்வளவுதானா…நாம சினிமாவுல நடிக்கிறதுக்கு செலக்ட் ஆகிட்டோமான்னு எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்துச்சு.

நான் நடிச்ச அந்த முதல் மலையாள படத்தோட பேரு ‘நிர்த்தசாலா.’ 1972-ல வெளிவந்துச்சு. அதுக்கப்புறம் சின்னச்சின்ன ரோல்கள்ல சில படங்கள்ல நடிச்சேன். 1973-ல ‘நிர்மால்யம்’கிற படத்துல ஹீரோயினா நடிச்சேன். அந்தப் படத்துல வர்ற ரொமான்ஸ் சீன்ல நடிக்கத் தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த காலத்துல 14,15 வயசுல ரொமான்ஸ்க்கு அர்த்தமே தெரியாதே.

நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா

அந்தப் படத்தைப் பார்த்துட்டுதான், ‘அவளும் பெண் தானே’ங்கிற தமிழ்ப்பட வாய்ப்பு வந்துச்சு. அந்தப் படத்துல என்னை புக் பண்றதுக்காக எங்க ஊருக்கே வந்துட்டாங்க. அந்தப் படத்தோட கதைப்படி என்னோடது பாலியல் தொழிலாளி கேரக்டர். அதைக் கேட்டதும் எங்க அப்பா பயந்துப் போயிட்டாரு. ’அவ ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருந்த குழந்தைங்க. டான்ஸ் கத்துக்கிட்டதால அவ நடிக்கவும் செய்யுறா. ஆனா, நீங்க சொல்றது பாலியல் தொழிலாளி கேரக்டர். அந்த வார்த்தைக்கு என் பொண்ணுக்கு அர்த்தம்கூட தெரியாது. அதனால, இந்தப்படத்துல அவளால நடிக்க முடியாது’ன்னு தீர்மானமா சொல்லிட்டார்.

ஆனா, டைரக்டர் உங்க பொண்ணு இந்த கேரக்டர்ல நடிச்சா தான் படம் ஓடும். அப்படி படம் ஓடலைன்னா நான் ஃபீல்டை விட்டே போயிடுறேன்னு சொன்னார். வேற வழியில்லாம அப்பாவும் ஒத்துக்கிட்டார். படம் வெளியாகி நல்லா ஓடுச்சு. அதுக்கப்புறம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு வரிசையா பட வாய்ப்புகள் வந்துச்சு’’ன்னு மகிழ்ச்சியா சொல்லி இருக்காங்க.

கேரளாவில் பிறந்ததால சுமித்ராவுக்கு மலையாளம் அத்துப்படி. விசாகப்பட்டினத்தில் வளர்ந்ததால தெலுங்கும் அத்துப்படி. ’அவளும் பெண்தானே’ வாய்ப்பு கிடைத்ததும் தமிழையும் உடனே கத்துக்கிட்டாங்களாம். இதே படத்தை கன்னடத்தில் எடுக்க அங்கேயும் சுமித்ராதான் ஹீரோயின். உடனே கன்னடம் கத்துக்கிட்டு அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க. ஒரு புது மொழியை கத்துக்கிறதுல சுமித்ரா பயங்கர எக்ஸ்பர்ட்னு அப்ப எல்லாரும் பாராட்டுவாங்களாம்.

நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா

சுமித்ரா வழக்கமான ஹீரோயின் கேரக்டர்ஸ் செஞ்சாலும், கூடவே அவங்க நடிப்புத் திறமைக்கு தீனி போடுற கதை நாயகியாகவும் பல படங்கள்ல நடிச்சிருக்காங்க. அந்த கேரக்டர்ஸ் அவங்களைத் தேடி வந்துச்சோ… இல்ல சுமித்ராவே நடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கிறதுக்கான ரோல்களை தேடித்தேடி செஞ்சாங்களோ… ஆனா, அவங்க ஹீரோயினா நடிச்ச காலத்துல இருந்து இன்னிக்கு அவங்க பண்ற அம்மா கேரக்டர்ஸ் வரைக்கும், பெரும்பாலும் அவங்க கதாபாத்திரம் ஸ்ட்ராங்கா, ஹீரோ, ஹீரோயின்கூட டிராவல் பண்ற மாதிரியே இருக்கும். உதாரணம் சொல்லணும்னாகூட நிறைய படங்களை சொல்ல வேண்டி வரும்.

காதலன் கிட்ட ஏமாந்து, அவன் நண்பன்கிட்ட அடைக்கலமாகுற பெண்ணா ’புவனா ஒரு கேள்விக்குறி’, அப்பாவி கிராமத்துப்பெண்ணா ’சிட்டுக்குருவி’, ஆண்களைப் பிடிக்காத பெண்ணா ’நிழல் நிஜமாகிறது’, அக்காவோட பிள்ளைகளுக்கு அம்மாவாகுற கன்னிப்பெண்ணா ’மழலைப்பட்டாளம்’, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டப் பெண்ணா ‘அண்ணன் ஒரு கோயில்’, மனசுக்குள்ளேயே காதலை மறைக்கிற பெண்ணா ’நந்தா என் நிலா’, தோழி மீது உயிரையே வெச்சிருக்கிற பெண்ணா ’வட்டத்துக்குள் சதுரம்’னு சொல்லிட்டே போகலாம்.

நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா

இந்த நேரத்துலதான் சுமித்ராகிட்ட தன்னோட காதலை சொல்லி இருக்கார் கன்னட படவுலகத்தோட பிரபல டைரக்டர் ராஜேந்திர பாபு. இவங்களும் யெஸ் சொல்ல, 1980-ல கல்யாணம் நடந்திருக்கு. ஆனா, அதுக்குப்பிறகும் நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் சுமித்ராவை தேடி வந்துக்கிட்டே இருந்திருக்கு.

’’கல்யாணம் ஆகிட்டதால நீ நடிக்கக்கூடாதுன்னு உன் திறமைக்கு நான் தடை சொல்ல மாட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா தாராளமா நடின்னு சொன்னார். அதுக்கப்புறம், 1985-ல இருந்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ’கன்னிராசி’யில ரேவதிக்கு அம்மா, ‘அக்னி நட்சத்திர’த்துல பிரபுவோட அம்மா, ‘பணக்காரன்’ல ரஜினிக்கு அம்மா, ’சிங்கார வேலன்’ல கமலுக்கு அம்மா, ’வீறாப்பு’, ’முத்தினக்கத்தரிக்காய்’ல சுந்தர்.சி.க்கு அம்மா, ’சிங்க’த்தில் சூர்யாவுக்கு அம்மா, ‘வலிமை’யில அஜீத்துக்கு அம்மான்னு இப்பவும் எனக்கான கேரக்டர்ஸ் வந்துகிட்டே தான் இருக்கு. இதுல நான் ஜோடியா நடிச்ச ரஜினிக்கும், கமலுக்கும் கூட அம்மாவா நடிச்சிருக்கேன்’’னு சொல்ற சுமித்ராவுக்கு, ரெண்டு பெண் குழந்தைங்க. ரெண்டு பேருமே நடிகைகள்தான். மூத்தப்பொண்ணு உமா, ‘வானவில்’ படத்துல நாயகி அபிராமியோட தங்கச்சியா அறிமுகமாகி, அப்புறம் பார்த்திபன் ஜோடியா ’தென்றல்’, ’சொக்கத்தங்கத்துல’ விஜயகாந்துக்கு தங்கையா, பிரகாஷ் ராஜுக்கு ஜோடியா நடிச்சது எல்லாருக்குமே தெரியும்.

நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சிருக்கிற சுமித்ரா, இப்போ தன்னோட 70 வயசுகள்ல இருக்கார். இன்னிக்கு வரைக்கும் தன்னோட கரியர்ல ஆக்டிவா இருக்கிறதுக்கு காரணமா அவர் சொல்றது ஹெல்தியான உணவு, போதுமான ஓய்வு, நல்ல தூக்கம்கிற இந்த மூணு விஷயங்களைத்தான்.

இன்னும் பல காலம் வாழ, பல படங்கள் நடிக்க வாழ்த்துகள் மா..!

(நாயகிகள் வருவார்கள்)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *