
‘அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக உங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் தகவல்களை அரசிடம் கொடுங்கள்’ என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்திடன் கேட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு.
‘அது எங்களது மாணவர்களின் தனிப்பட்ட தரவுகள்’ என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் மறுக்க, நிதி நிறுத்தத்தைக் காட்டி பயமுறுத்தியது அமெரிக்க அரசு. இதற்கும் பல்கலைக்கழகம் பயப்படாததால், அதற்குச் செல்ல வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியத்தையும், 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.
அப்போதும் அசரவில்லை ஹார்வார்டு பல்கலைக்கழகம். இதனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் இனி சேர முடியாது. இறுதி ஆண்டை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களைத் தவிர, பிற வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால், எதற்குமே பல்கலைக்கழகம் அசைந்துக் கொடுக்கவில்லை.
அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த நிலையில், நேற்று வந்த தீர்ப்பில், ‘ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாது என்கிற ட்ரம்ப் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து படிக்கலாம்’ என்று உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

ட்ரம்ப் பதிவு கூறுவது என்ன?
இன்னொரு பக்கம், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தோடு அரசுக்கு இருந்த பிரச்னை என்ன ஆனது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்களும், ஹார்வார்டு பல்கலைக்கழகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அநேகமாக அடுத்த வாரம், அதன் முடிவு அறிவிக்கப்படும்.
ஹார்வார்டு பல்கலைக்கழகம் பொறுப்புணர்வோடு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வருகிறது. மேலும், அவர்கள் சரியானதை செய்ய ஆர்வமாக இருப்பதுப்போல தெரிகிறது. இதே மாதிரியான சுமூக சூழல் நிலவினால், முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும், நாட்டிற்கு நன்மையானதாகவும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்பு, ட்ரம்ப் அரசு கொடுத்த அனைத்து நெருக்கடிகளையும் தாங்கிய ஹார்வார்டு பல்கலைக்கழகம், ட்ரம்பின் இந்தப் பதிவால் இப்போது அடிப்பணிகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், ட்ரம்ப் பேசும் பலவும் நடந்ததில்லை என்பதால் ஹார்வார்டு பல்கலைக்கழகம் பதில் அளித்தால் மட்டுமே உண்மை தெளிவாகும்.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Jun 20, 2025, 3:40 PM ET )Many people have been asking what is going on with Harvard University and their largescale improprieties that we have been addressing, looking for a solution. We have been working closely… pic.twitter.com/jWFoHuy3O9
— Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) June 20, 2025