
கூடைப்பந்து பயிற்சியாளரான குல்ஷனுக்கு (ஆமிர் கான்) முன்கோபமும் ஈகோவும் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மனோபாவம்.
ஒரு பிரச்னையில் தன்னுடைய சீனியர் கோச்சை அவர் அடித்துவிட, கூடவே அன்று இரவே குடித்துவிட்டு ஒரு விபத்தில் போலீஸிடமும் மாட்ட, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அங்கும் அவரின் நடத்தை விமர்சனத்துக்கு உள்ளாக, அறிவுசார் சவால் (Intellectual Disabilities) உள்ள ஆட்டக்காரர்களை ஒன்றிணைத்து கூடைப்பந்து பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறார் நீதிபதி.
கருத்து வேறுபாட்டால் குல்ஷன் ஏற்கெனவே தன் மனைவி சுனிதாவை (ஜெனிலியா) பிரிந்திருக்கும் நிலையில், இதை வேண்டாத வேலையாகவே பார்க்கிறார்.
அறிவுசார் சவால் குறித்து தவறான புரிதலைக் கொண்டிருக்கும் குல்ஷனை அந்தக் கூடைப்பந்து ஆட்டக்காரர்கள் எப்படி மாற்றுகிறார்கள் என்பதை ஃபீல் குட் டிராமாவாகச் சொல்கிறது, ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சித்தாரே ஜமீன் பர் இந்திப் படம்.
2007-ம் ஆண்டு வெளியான தாரே ஜமீன் பர் படத்திற்கும் இப்படத்திற்கு நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. ஆனால், அப்படம் பேசிய முக்கியமான உரையாடலை வேறொரு பார்வையில் இப்படமும் பேசியிருக்கிறது. 2018-ல் வெளியான ‘சாம்பியன்ஸ்’ எனப்படும் ஸ்பானிஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடைப்பந்து பயிற்சியாளராக ஆமிர் கான் படம் முழுவதும் தனது புருவ அசைவுகளால் நடிப்பில் வேறுபாடு காட்டி, மைதானத்தைத் தாண்டி திரையரங்குகளிலும் மாஸ்டர் கிளாஸ் எடுக்கிறார்.
சிந்தனை மாற்றத்தை எட்டிய பிறகு க்ளைமாக்ஸில் காட்டும் நெகிழ்ச்சியான முகபாவனைகளால் நம் மனதையும் கனமாக்குகிறார். கதாநாயகனுக்கு உதவியாக அவருடைய செயல்களில் உடன் இருக்கும் டெம்ப்ளேட் மனைவி கதாபாத்திரத்தில் ஜெனிலியா.
ஆனால், அவர் வரும் காட்சிகளில் எமோஷனுக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்து குல்ஷனுக்கும், படத்திற்கும் தோள் கொடுத்திருக்கிறார்.

அறிவுசார் சவால் கொண்டவர்களாக கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஷ்ரா, ரிஷி ஷகானி, ரிஷப் ஜெயின், சாம்விட் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர், ஆஷிஷ் பெண்ட்சே, அரோஷ் தட்டா, ஆயுஷ் பன்சாலி, ரிஷி ஷஹானி, கோபிகிருஷ்ணன் வர்மா என அனைவருமே திரையில் தங்களின் கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாக உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
திரைப்படம் கலகலப்பாக நகர்வதற்கும், ஃபீல் குட் எமோஷனை ஏற்படுத்தி உதட்டோரத்தில் புன்னகை வரவழைப்பதற்கும் முக்கியக் காரணமே இவர்கள்தான்.
ஆர்ப்பாட்டமில்லாத ப்ரேம்களையும் கலர்ஃபுல் டோன்களையும் அமைத்து ஃபீல் குட் டிராமாவுக்குத் தேவைப்படும் விஷுவலைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.
காமெடி, எமோஷன் என இடைவெளி கொடுத்துச் சரியாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சாரு ஸ்ரீ ராய். ஆனால், இரண்டாம் பாதியில் நீளமான சினிமாத்தனமான காட்சிகளைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

‘தாரே ஜமீன் பர்’ படத்திற்கு இசையமைத்த அதே ஷங்கர் – எஷான் – லாய் கூட்டணியிலிருந்து இப்படத்திற்கும் தரமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
ராம் சம்பத்தின் பின்னணி இசையும் முக்கியமான காட்சிகளை அடுத்த கொண்டு சென்றிருக்கிறது.
அறிவுசார் சவால் கொண்டவர்கள் மீதான இந்தச் சமூகத்தின் பார்வை எப்படியிருக்கிறது, அவை எப்படி மாற வேண்டும் என்பதை எவ்வித திணிப்புமின்றி க்ளாஸ் எடுத்த விதத்திற்கு க்ளாப்ஸ்!
படத்தின் களம் சீரியஸாக இருந்தாலும் ஆங்காங்கே காமெடிகளையும், ஃபீல் குட் படத்திற்குத் தேவையான விஷயங்களையும் சரியான அளவில் கொடுத்து நல்ல அனுபவத்தைத் தருகிறார் திரைக்கதையாசிரியர் திவி நிதி ஷர்மா.

ஆனால், படத்தின் தொடக்கத்தில் அறிவுசார் சவால் கொண்டவர்களைப் பகடி செய்யும் சில காட்சிகள் மட்டும் துருத்தல்!
அந்த வசனங்கள் எல்லாம் பொதுச் சமூகத்தின் பிரதிபலிப்பாக வரும் குல்ஷனின் பார்வையிலிருந்து விரிந்தாலும், அது 20 நிமிடங்கள் காட்சிகளாக விரிவதைத் தவிர்த்திருக்கலாம்.
“விதி என்பது கைரேகைகளில் எழுதப்படுவதில்லை. நம் குரோமோசோம்களில் எழுதப்படுகிறது”, “எது நார்மல்? யார் நார்மல்? என்பதெல்லாம் அவரவரின் அகநிலைப் பொறுத்ததே!”, “அவங்களுக்கு நான் எதையும் சொல்லிக் கொடுக்கல, அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன்” எனப் போகிற போக்கில் வரும் எதார்த்த வசனங்கள் ஸ்வீட் ஹைக்கூக்கள்!

வழக்கமான ஸ்போர்ட்ஸ் கதை, அதற்குள் பயிற்சியாளர்களுக்கு இடையேயான ஈகோ க்ளாஷ் என டெம்ப்ளேட் டிராமாவாக அமைந்திருந்தாலும், படத்தின் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டி ரசிக்க வைக்கிறார்கள்.
நகைச்சுவை, எமோஷனல் டிராமா என முதல் பாதி கச்சிதமான எண்டர்டெயினராக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் இப்படியான விஷயங்கள் நிறைந்திருந்தாலும், ஒரு சில செயற்கை காட்சிகளாலும், தேவைக்கு மீறி நீளும் காட்சிகளாலும் படம் சற்றே தடுமாறுகிறது. அதிலும், இறுதிப்போட்டிக்கு ஆட்டக்காரர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதற்குப் பணத்தைத் தயார் செய்யும் காட்சிகள் எல்லாம் பழங்காலத்து சினிமா டெம்ப்ளேட் பாஸ்!
குறைகள் இருப்பினும், அறிவுசார் சவால் கொண்டவர்களைப் பற்றிப் பாடமெடுக்கும் முக்கியமான படமான சித்தாரே ஜமீன் பர், வானுயரத்தில் மிதக்கும் நட்சத்திரங்களைப் போலக் காலத்திற்கும் மிளிரும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…