• June 19, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்தது. பின்னர், இருநாடுகளும் மோதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

ஆனால், வர்த்தகத்தை முன்வைத்து இந்த மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவந்தார். இருப்பினும், ட்ரம்ப்பின் இத்தகைய கூற்றை மத்திய அரசு மறுத்துவந்தது.

மோடி – ட்ரம்ப்

நேற்று முன்தினம்கூட, கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டிலிருந்து ட்ரம்ப் முன்கூட்டியே கிளம்பியதால், பிரதமர் மோடியும் அவரும் சந்திக்க முடியாமல் போனது.

அதன்பிறகு ட்ரம்பிடம் செல்போனில் பேசிய மோடி “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை” என்று அவரிடமே கூறியதாகச் செய்தியாளர்களிடம் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதலை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “பாகிஸ்தானை நான் நேசிக்கிறேன். மோடி அற்புதமான மனிதர்.

மோடியிடம் செல்போனில் பேசினேன். இந்தியாவுடன் நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறோம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை நான்தான் நிறுத்தினேன். இதில் நான் எந்தக் கதையும் எழுதவில்லை.

இரண்டு பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான போரை நான் நிறுத்தினேன். இது மக்களுக்கும் தெரியும்.” என்று கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அமெரிக்க மத்தியஸ்தம் செய்யவில்லை என்று ட்ரம்மிடம் மோடியே கூறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்த அடுத்த நாளே, இருநாடுகளுக்கிடையிலான மோதலை நான்தான் நிறுத்தினேன் என மீண்டும் ட்ரம்ப் கூறியிருப்பதால், மத்திய அரசு கூறுவது உண்மைதானா என கேள்வியெழத் தொடங்கியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *