
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் ராம், “யுவன் ரசிகர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன், தினமும் எனக்கு கெட்ட வார்த்தையில் மெசேஜ் வருது. இந்தப் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு முன்பணமும் கொடுத்திருந்தோம்.
திடீர்னு மதன் கார்க்கி, ‘இந்தப் படத்துல அதிக பாடல்கள் இருந்தா நல்லா இருக்கும்னு’ சொன்னார். அந்த நேரத்துல நாங்க ரோட்டர்டேம் திரைப்பட விழாவுக்குப் படத்தைக் கொண்டு போகணும். யுவனும் அப்போ துபாய்ல இருந்தார்.
அப்படியான சூழல்ல அவரால பாடலை கம்போஸ் செய்ய முடியலை. அப்போ, ‘பின்னணி இசை நான் பண்ணிடுறேன்னு’ சொன்னார். பிறகுதான் சந்தோஷ் தயாநிதி படத்துக்குள்ள வந்து எங்களுக்குப் பாட்டை ரெடி பண்ணிக் கொடுத்தார்.
நானுமே யுவனோட ரசிகன்தான். நானுமே அவரை மிஸ் பண்றேன். இந்தப் படம் எளிமையாக எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான பொருட்செலவோடுதான் எடுத்திருக்கோம்.
நானும் சிவா சாரும் ஒரே வருஷம் சினிமாவுக்கு வந்தோம். நான் அப்போ ‘கற்றது தமிழ்’ படத்தை எடுத்திருந்தேன். அவர் ‘சென்னை 28’ படத்துல நடிச்சிருந்தார்.
சிவா சார் முன்னாடி கேமரா இருந்தாலும், எந்த தயக்கமும் இல்லாமல் சுலபமாக நடிப்பார். இந்தப் படத்துல நடிச்சிருக்கிற சிறுவனுக்கு சைக்கிள் ஓட்டுறதுல இருந்து எல்லாமே சொல்லிக் கொடுத்தோம். ஆனா, நடிக்கச் சொல்லிக் கொடுக்கலை.

தானாகவே நடிப்பு வந்தது. என்னுடைய அசிஸ்டன்ட் நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போதும், ‘இது கிரிஞ்சாக இருக்கு’னு சொல்லிட்டு போயிடுவான்.
எனக்கு மனச்சோர்வு இருந்தா, மிஷ்கின் சாரோட ஆபீஸுக்குப் போயிடுவேன்.
அவர்கிட்ட எங்க தாத்தாவோட சாயல் இருக்கும். என்னுடைய ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை மார்ச் மாசத்துல வெளியிடுறதுக்குத் திட்டமிட்டோம். ஆனா, சில காரணங்களால அது தள்ளிப் போயிடுச்சு.
அந்தப் படத்தின் வெளியீட்டினாலேயே ‘பறந்து போ’ படத்தின் ப்ரோமோஷனை ஸ்டார்ட் பண்ணாமலேயே இருந்தோம்” என்று கூறி முடித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…