• June 9, 2025
  • NewsEditor
  • 0

டென்னிஸ் உலகில் ஃபெடரர், ரஃபேல் நடால், கோகோவிச் ஆகிய ஜாம்பவான்களின் வரிசையில், ஒரு புதிய ஜாம்பவானாக புதிய சகாப்தத்தை உருவாக்கி வருகிறார் ஸ்பெயினின் இளம் வீரர் கார்லஸ் அல்கரஸ் (Carlos Alcaraz).

பிரெஞ்சு ஓபனின் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்கரஸுக்கும் (22 வயது), உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கும் (Jannik Sinner 23 வயது) இடையே 2025 பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டி நேற்று (ஜூன் 8) நடைபெற்றது.

முதல் இரண்டு செட்களில் 6-4, 7-6 என நடப்பு சாம்பியனை முந்தி வெற்றிக்கு அருகில் சென்றார் ஜானிக் சின்னர்.

இருப்பினும், அடுத்த இரண்டு செட்களில் கார்லஸ் அல்கரஸ் 6-4, 7-6 என மீண்டெழுந்து, ஐந்தாவது செட்டை டை-பிரேக்கு கொண்டுசென்றார்.

கார்லஸ் அல்கரஸ்

அதில், 10-2 என்ற கணக்கில் வென்ற கார்லஸ் அல்கரஸ், கடைசி செட்டை 7-6 எனக் கைப்பற்றி தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

சுமார் 5 மணிநேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியை, பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நீடித்த இறுதிப்போட்டி என்ற சாதனையாகப் பதிவுசெய்ய வைத்திருக்கின்றனர் டென்னிஸ் உலகின் இந்தப் புதிய சகாப்த இளைஞர்கள்.

இதற்கு முன்னர் பிரெஞ்சு ஓபனில், 43 ஆண்டுகளுக்கு முன் 1982-ல் 4 மணிநேரம் 47 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியே நீண்ட நேர இறுதிப் போட்டியாக இருந்தது.

மேலும், 22 வயதில் கார்லஸ் அல்கரஸும், 23 வயதில் ஜானிக் சின்னரும் சாதனை மேல் சாதனை மேல் படைத்துவரும் நிலையில் இவ்விருவரையும், ஃபெடரர் vs நடால் போல டென்னிஸ் உலகில் புதிய சகாப்தம் தொடங்குகிறது எனப் பலரும் கூறுகின்றனர்.

Jannik Sinner - Carlos Alcaraz
Jannik Sinner – Carlos Alcaraz

இதுவரையில், ஜானிக் சின்னரை 12 முறை எதிர்கொண்டிருக்கும் கார்லஸ் அல்கரஸ் அதில் 8 முறை வென்று முன்னிலை வகிக்கிறார்.

தற்போது, உலக டென்னிஸ் தரவரிசையில் ஜானிக் சின்னருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அல்காரஸ்தான் இருக்கிறார்.

19 வயதில் உலகின் நம்பர் 1!

Gen Z தலைமுறையைச் சேர்ந்த கார்லஸ் அல்கரஸ், 2003 மே 5-ம் தேதி ஸ்பெயினில் பிறந்தார்.

2018-ல் 15 வயதில் தொழில்முறை டென்னிஸில் தனது கரியரைத் தொடங்கிய அல்கரஸ், தனது முதல் வெற்றியே அப்போதைய 17 வயது சிறுவனும் தற்போதைய உலகின் நம்பர் வீரருமான ஜானிக் சின்னருக்கெதிராகத்தான் வந்தது.

கார்லஸ் அல்காரஸ்
கார்லஸ் அல்காரஸ்

2021 பாதியில் உலக டென்னிஸ் தரவரிசையில் டாப் 100-க்குள் நுழைந்த அல்கரஸ், அதே ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறி ஆண்டின் இறுதியில் டாப் 35-க்குள் நுழைந்தார்.

அடுத்த மூன்றே மாதங்களில் 2022 மார்ச்சில் மியாமி ஓபன் டென்னஸில் 18 வயதில் தனது முதல் ATP 1000 பட்டத்தை வென்றார்.

அதைத்தொடர்ந்து, அதே ஆண்டில் பிற்பாதியில் தனது கரியரின் முதல் மேஜர் சாம்பியன் பட்டமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம், 19 வயது 4 மாதம் 6 நாள்களில் தரவரிசைப்பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீரராக உயர்ந்து சாதனைப் படைத்த அல்கரஸ், 2022-ஐ நம்பர் ஒன் வீரராகவே நிறைவுசெய்தார்.

20 வயதில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனை!

2023 ஜனவரியில் வலதுகால் தசைப்பிடிப்பு காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அல்கரஸ் விலகவே, இத்தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று உலகின் நம்பர் ஒன் வீரரானார்.

பின்னர், காயத்திலிருந்து மீண்டுவந்த அல்கரஸ், அதே ஆண்டில் விம்பிள்டன் தொடரில் 7 முறை சாம்பியனான ஜாம்பவான் ஜோகோவிச்சை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அங்கிருந்து, கடத்த ஆண்டில் முதல்முறையாகப் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்று, அதே ஆண்டில் இரண்டாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

இதற்கிடையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

கார்லஸ் அல்கரஸ்
கார்லஸ் அல்கரஸ்

ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை!

2022 முதல் 2024 வரை நான்கு மேஜர் சாம்பியன் பட்டங்களை வென்ற அல்கரஸ், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் உலகின் நம்பர் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டதைத் தக்கவைத்திருக்கிறார்.

நான்கு ஆண்டுகளில் ஐந்து மேஜர் சாம்பியன்களைப் பெற்றிருக்கும் அல்கரஸ், ஓபன் டென்னிஸ் வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஐந்து மேஜர் தொடர் இறுதிப் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்.

மேலும், இந்த ஐந்து மேஜர் சாம்பியன் பட்டங்கள் மூலம் மற்றொரு டென்னிஸ் ஜாம்பவான் நடாலுடன் சாதனையை அல்கரஸ் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது நடாலும் அலகாரசும் சரியாக 22 வயது, 1 மாதம் மற்றும் 3 நாள்களில் 5 மேஜர் சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கின்றனர்.

வாழ்த்துகள் அல்கரஸ்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *