
1933ம் ஆண்டு வாக்கில், ஹிட்லரின் நாஜி ஆட்சியின் கொடூரங்கள் ஆரம்பமாகிறது. ஹிட்லர் ஜெர்மனியின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு, யூதர்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துகிறார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் சிறை வைக்கப்பட்டு, அழித்தொழிப்பு முகாம்களில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்.
இதிலிருந்து சில யூதர்கள் தப்பி தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொண்டனர். `பெரும் இன அழிப்பு’ என்ற இந்த ஹோலோகாஸ்ட் நிகழ்வு, வரலாற்றில் மிகப் பெரிய பேரழிவாகக் கருதப்படுகிறது. இந்தப் பேரழிவில், சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹிட்லரின் இந்த வதை முகாம்களில் சொல்லில் அடங்காத பல கொடூரங்கள் நடந்தன. விஷ வாயுக்கள், துப்பாக்கிக் குண்டு பவுடர்கள், எரிவாயுக்கள் பல பயன்படுத்தப்பட்டு பெரிய அறையில் அடைக்கப்பட்டு கொத்துக் கொத்தாக யூதர்களைக் கொல்லப்பட்டனர். பெண்கள் மீது பாலியல் கொடூரங்கள், படுகொலைகள் இரக்கமின்றி நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு, நியூரெம்பெர்க் (Nuremberg) நீதிமன்றங்களில் ஹிட்லர் உள்ளிட்ட நாஜி தலைவர்கள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர், தண்டனைகள் வழங்கப்பட்டன.
ஹிட்லரின் இந்தக் கொடூரங்களை, இனப் படுகொலையை, இரண்டாம் உலகப்போரின் பேரழிவை மையப்படுத்தி திரைப்படங்கள், ஆவணப்படங்கள் பல வெளியாகியிருக்கின்றன. அதில் சிறந்த அல்லது அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Schindler’s List
ஹிட்லரின் வதை முகாம்களில் கொடுமைக்குள்ளாகும் யூதர்களை, அடிமைகளாக வாங்க வரும் தொழிலதிபர், மனம் மாறி தன்னிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் வைத்து தன்னால் முடிந்த நூற்றுக்கணக்கான யூதர்களை வாங்கி அவர்களை வதை முகாம்களில் இருந்து விடுவிப்பதுதான் இதன் கதைக்களம்.
ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் லியாம் நீசன், ஓஸ்கார் ஷிண்ட்லர், பென் கிங்ஸ்லி, இட்ஸாக் ஸ்டெர்ன், கரோலின் குடால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வதை முகாம்கள், போர் கொடூரங்கள் பற்றிய படங்களாக இருந்தாலும் மனதிற்கு இலகுவான நெகிழ்ச்சிக் கதையாக இருக்கும் திரைப்படம் இது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை இப்படம் வென்றிருக்கிறது.
The Diary of Anne Frank

யூத இனத்தைச் சேர்ந்த Anne Frank என்ற இளம்பெண் எப்படியெல்லாம் நாஜி படைகளிடமிருந்து தப்பி மறைந்து வாழ்கிறார் என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘The Diary of Anne Frank’ என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு யூத இனப் பெண் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மில்லி பெர்கின்ஸ், ஜோசப் ஷில்ட்க்ராட், ரிச்சர்ட் பேமர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 1960 ஆம் ஆண்டு மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது, இதில் சிறந்த துணை நடிகை விருது ஷெல்லி வின்டர்ஸுக்கு வழங்கப்பட்டது.
The Pianist
பியானோ இசைக் கலைஞனாக இருக்கும் இளைஞன் நாஜி படைகளிடமிருந்து தப்பிப் பிழைப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டப் படம் இந்த ‘The Pianist’. அமைதி நிறைந்த இனிமையான பியானோ இசையில் ஆரம்பமாகும் இப்படம் வெடிகுண்டு சத்தத்தால் நிறைந்து மீண்டும் அமைதியை நோக்கிப் பயணிக்கும். ரோமன் போலன்ஸ்கி இயக்கியிருக்கும் இப்படத்தில் அட்ரியன் பிரோடி, வ்வாடிஸ்லாவ் ஸ்பில்மான், தாமஸ் கிரெட்ச்மன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறது இப்படம். 2002 ஆம் ஆண்டு கன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) ‘பால்மே டி’ஓர்’ (Palme d’Or) விருதையும் பெற்றுள்ளது.
Life Is Beautiful

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழும் யூத இனத்தைச் சேர்ந்தவரின் மகன் நாஜி வதைமுகாம்களில் மாட்டிக்கொள்கிறான். மாட்டிக்கொண்ட மகனை தன் திறமையால் காப்பாற்றும் கதை இது. நகைச்சுவை குணம் கொண்ட தந்தை, தன் மகனிற்கு கொடூரங்களைத் தாண்டி, அழகான மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொடுக்க வேண்டும் என போராடுகிறார்.
கொடூரமான வரலாற்றை நகைச்சுவை பாணியில் விவரிக்கும் இத்திரைப்படத்தை ரோபர்டோ பெனினி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் 1998 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ (Grand Prix) விருதையும், 1999 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளில் (Academy Awards) மூன்று விருதுகளையும் வென்றிருக்கிறது.
The Boy in the Striped Pajamas

இத்திரைப்படம் ஜான் போய்னின் (John Boyne) 2006 ஆம் ஆண்டு வெளியான ‘The Boy in the Striped Pajamas’ நாவலைத் தழுவி, அதே பெயரில் மார்க் ஹெர்மன் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அசா பட்டர்ஃபீல்ட், ஜாக் ஸ்கான்லன், வேரா ஃபார்மிகா, டேவிட் தியூலிஸ் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். நாஜி இனத்தைச் சேர்ந்த வதை முகாமின் அதிகாரியாக இருப்பவரின் மகனும், வதை முகாமில் சிறைப்பட்டிருக்கும் யூத சிறுவனும் நட்பு கொண்டு சேர்ந்து விளையாட முயலுகின்றனர். இரண்டு எதிரெதிர் சூழலில் இருக்கும் சிறுவர்களின் வழியே வதை முகாம்களின் கொடுமைகளை உணர்த்தும் உணர்வுப் பூர்வமானது இப்படம்.
Night and Fog

நாஜி சித்தாந்தத்தின் எழுச்சியை விவரிக்கும் விதமாகத் தொடங்கும் இப்படம் நாஜி வதை முகாம்களில் நடக்கும் மரணதண்டனைகள், கொத்துக்கொத்தாக உயிரைக் கொல்லும் வாயு அறைகள் மற்றும் உடல் குவியல் எரிப்பு பற்றி விவரிப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது.
1956 ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரெஞ்சு ஆவணப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின் போது நாசிகளால் நடத்தப்பட்ட கொடூரங்களைப் பற்றிய முக்கியமான ஆவணப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்திரைப்படம் பிரான்ஸ் பள்ளிகளில் ஹோலோகாஸ்ட் பற்றிய கல்விக்காக திரையிடப்படுகிறது.
Shoah

பிரஞ்சு ஆவணப்படமான இது இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜிகள் மேற்கொண்ட யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பற்றிய ஆழமான சாட்சியங்களின் தொகுப்பாகும். கிளோட் லான்ஸ்மான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகர்கள் இல்லாமல், ஹோலோகாஸ்ட் நிகழ்வுகளை நேரில் அனுபவித்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் வழங்கியவர்கள் நேர்காணல்கள், வாக்கு மூலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்திரைப்படம் ஹோலோகாஸ்ட் பற்றிய புரிதலை, வரலாற்றை விவரிக்கும் முக்கியமான ஆவணப்படமாகக் கருதப்படுகிறது.
The counterfeiters

காதல் கதை வழியாக நாஜி வதைமுகாம்களின் கொடூரத்தை விளக்கியிருக்கும் படம். தன் காதலன் யூத இனத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்துகொண்ட காதலி காதலனைத் தவிர்க்க முயலும்போது நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிய தன் கடந்த காலத்தைப் பற்றி காதலன் விளக்குவதுதான் இப்படத்தின் கதை.
நாஜி ஜெர்மனியில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்ட இப்படத்தை ஸ்டீபன் ருஸோவிட்ஸ்கி இயக்கியிருக்கிறார். சிறந்த ஆங்கிலம் அல்லாத வெளிநாட்டு மொழி திரைப்படம் என்ற ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது இப்படம்.
Europa Europa

யூத அடையாளத்தை மறைத்து ஹிட்லர் யூத் அமைப்பில் சேர்ந்த சிறுவனின் வாழ்க்கை மற்றும் அவனது இளமைக்கால காதல் வாழ்க்கை, ஜெர்மனியில் குடும்பத்துடன் வசிக்கும் இளைஞனின் வாழ்வியல் மற்றும் அவன் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறது இப்படம். அக்னியேஷ்கா ஹொலண்ட் இப்படத்தை இயக்க மார்கோ ஹொஃஷ்னைடர், ஜூலி டெல்பி, ஹான்ஸ் ஸிச்சுலர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
Judgement at Nuremberg

இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் நாஜி அதிகாரிகளின் போர் குற்றங்கள், கொடூர செயல்களை பற்றி ந்யூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படமாகும். ஸ்டான்லி கிராமர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். யூதர்கள் படுகொலை பற்றி எடுக்கப்பட்ட ‘The Holocaust’ படங்களின் நிறைவாக அமைந்திருக்கும் படம் இது. நாஜி வதை முகங்களில் யூத படுகொலையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தலைவர்கள் என அனைவருக்கும் தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மையமாக வைத்து எடுக்கபட்ட படம் இது.
மொத்தம் 11 ஆஸ்கர் விருது பரிந்துரைகள் பெற்ற இப்படத்திற்கு சிறந்த நடிகர் மக்ஸிமிலியன் ஷெல், சிறந்த திரைக்கதை அபி மான் உள்ளிட்ட இரண்டு ஆஸ்கர் விருகள் வழங்கப்பட்டன.
யூதப் படுகொலைப் பற்றியும், உங்களைப் பாதித்த திரைப்படங்கள் பற்றியும் கமெண்டில் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள் மக்களே.!