
தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ அந்தோணி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும்அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வீட்டின் கீழ் பகுதியில் சிந்துஜா, செல்வ அந்தோணி குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், மேல் மாடி வீட்டில் கணவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருமணம் ஆன நாளிலிருந்து செல்வ அந்தோணி குடித்துவிட்டு சிந்துஜாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சிந்துஜாவிடம் ”உனது குடும்ப சொத்தில் பங்கு வேண்டும், அதை உடனே எழுதி வாங்கு” என கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் செல்வ அந்தோணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதை சிந்துஜா கேட்டதற்கு அவரை அடித்து துன்புறுத்தியதுடன் கணவர் செல்வ அந்தோணி, மாமியார் மாரியம்மாள், கணவரின் அக்காள் செல்வ வள்ளி ஆகியோர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். அத்துடன் தோசை கரண்டியை தீயில் காய வைத்து சிந்துஜாவின் முகம் மற்றும் வாயில் சூடு வைத்தது துன்புறுத்தி உள்ளனர்.
இந்த விஷயம் சிந்துஜாவின் குடும்பத்தினருக்கு தெரியக்கூடாது என்பதற்காக சிந்துஜாவை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பூட்டி வைத்ததுடன் அவரிடம் செல்போன் ஆகியவற்றை கொடுக்காமல் பிடுங்கி தனிமைச் சிறையில் வைத்துள்ளனராம்.
இந்த நிலையில் மகள் போனில் பேசாததால், சிந்துஜாவின் வீட்டிற்கு சென்ற அவரது குடும்பத்தினர் சிந்துஜாவின் முகம் மற்றும் வாயில் சூடு வைத்த தடத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிந்துஜாவை, மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் சிந்துஜாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்ததுடன் மனைவியை கொடுமைப்படுத்திய தொடர்பாக கணவன் செல்வ அந்தோணியை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மாமியார் மாரியம்மாள் மற்றும் கணவரின் அக்கா செல்வ வள்ளியை தேடி வருகின்றனர்.