
‘பெங்களூரு vs லக்னோ!’
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டாப் 2 கனவுக்கு பெருத்த சவாலை கொடுத்திருக்கிறார் ரிஷப் பண்ட். ஏக்னா மைதானத்தில் நடந்து வரும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக ஆடி சதமடித்திருக்கிறார். பெங்களூரு அணியின் பௌலர்களால் பண்ட்டை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
‘பார்மில் இல்லாத பண்ட்!’
ரிஷப் பண்ட் இந்த சீசன் முழுவதுமே பார்மிலேயே இல்லை. லக்னோ அணி நிர்வாகம் அவர் மீது 27 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. பெரும் நம்பிக்கையோடு கேப்டன் பதவியையும் வழங்கியது. ஆனால், பண்ட்டால் அத்தனை இலகுவாக ஆட முடியவில்லை. அணியின் நம்பிக்கையை காப்பாற்ற முடியவில்லை.
மோஷின் கான், மயங்க் யாதவ் என லக்னோ அணி நம்பியிருந்த பௌலர்கள் பலரும் சீசனின் தொடக்கத்திலேயே காயம் காரணமாக முழுமையாக வெளியேறினர். இதனால் லக்னோவின் பேட்டிங்கின் மீது அதிக சுமை ஏறியது. கேப்டன் ரிஷப் பண்ட் மீது பொறுப்பு கூடியது. ஆனால், அதற்கேற்றவாறு அவர் பெர்பார்ம் செய்யவில்லை.

கடந்த 13 போட்டிகளில் மொத்தமாக சேர்த்தே 151 ரன்களைத்தான் எடுத்திருந்தார்.
ஒரே ஒரு அரைசதம் மட்டுமே இதில் அடக்கம். ரிஷப் பண்ட்டுக்கு ரெட் பால் கிரிக்கெட் மட்டும்தான் செட் ஆகும். அதில் அவர் சாகசமான இன்னிங்ஸ்களை ஆடுகிறார் என்பதற்காக ஒயிட் பாலிலும் அவர் மீது அதே எதிர்பார்ப்பை வைக்கக்கூடாது என விமர்சனங்கள் எழுந்தது. அதில் நியாயமும் இருந்தது. பண்ட் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார். மேலும், லக்னோ அணியின் உரிமையாளர் அணியின் விவகாரங்களில் அதிகம் தலையிடக் கூடியவர் என்பதால், பண்ட்டை அடுத்த சீசனுக்கு முன்பாக ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்றும் பேசப்பட்டது.
‘நிரூபிக்க வேண்டிய கட்டாயம்!’
பண்ட் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதுவும் இது கடைசி லீக் போட்டி. மேலும், இந்திய அணிக்கான ஒயிட் பால் அணியிலும் அவர் முதல் வாய்ப்பாக இல்லை. இந்த லீக் போட்டியை விட்டால் டி20 க்களில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை காட்ட பண்ட் நிறையவே போராட வேண்டியிருக்கும்.

இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில்தான் இன்று நம்பர் 3 இல் இறங்கினார். பண்ட் சதமடித்ததற்கு இதுவுமே ஒரு முக்கிய காரணம். பண்டுக்கு மிடில் ஆர்டர் செட் ஆகாது. அவர் டாப் ஆர்டரில் இறங்கி பவர்ப்ளேயிலேயே அடித்து ஆட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.

‘பண்ட் அணியின் சிறந்த வீரர் எனில், அவர் அதிக பந்துகளை ஆட வேண்டும். அதற்கு ஓப்பனிங்கிலோ நம்பர் 3 யிலோ அவர் இறங்க வேண்டும். அப்படி இறங்கி அவருக்கு செட் ஆகிவிட்டால் அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதைத்தான் முன்பிருந்தே சொல்லிக்கொண்டிருந்தோம். இன்றுதான் பண்ட் அதை செய்திருக்கிறார்.’ என பண்ட்டின் சதத்துக்கு பிறகு ஆதங்கமும் மகிழ்ச்சியும் கலந்து ராபின் உத்தப்பா பேசியிருந்தார்.
‘மிரண்டு போன ஆர்சிபி!’
பவர்ப்ளேக்குள்ளாகவே வந்துவிட்டதால் அங்கிருந்தே அதிரடியை தொடங்கிவிட்டார். நன்றாக வீசிய நுவான் துஷாராவை விட்டுவிட்டு மற்ற எல்லா பௌலர்களையும் டார்கெட் செய்து அடித்தார். யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஷெப்பர்ட் என யாருமே பண்ட்டின் அடிக்கு தப்பவில்லை.

க்ரூணால் பாண்ட்யா 2 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால், ரிஷப் பண்ட் இடதுகை பேட்டர் என்பதால் மேட்ச் அப் படி பண்ட்டுக்கு எதிராக அவருக்கு ஓவர் கொடுக்காமல் ஆர்சிபி தவிர்த்தது. இதுவும் பண்ட்டுக்கு சாதகமாக அமைந்தது. க்ரீஸூக்குள் உருண்டு புரண்டு ஆடுவது, ஒற்றைக் கையில் மிட் விக்கெட்டில் சிக்சரை பறக்கவிடுவது என ரெட் பாலில் ஆடுவதை போல இங்கேயும் தன்னுடைய சாகசமான ஷாட்களை ஆடினார்.
அசத்தலான இன்னிங்ஸ். 61 பந்துகளில் 118 ரன்களை அடித்திருந்தார். கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். சதமடித்துவிட்டு துள்ளிக் குதித்து கொண்டாடினார். பெரிய மனச்சிக்கலிலிருந்து விடுபட்டதை போல இருந்தார்.

இப்படியொரு இன்னிங்ஸூக்கு பிறகு பண்ட்டை லக்னோவிலிருந்து ரிலீஸ் செய்யும் முடிவுக்கு அந்த அணியின் உரிமையாளர் வரவே மாட்டார். அதற்கும் மேல் பண்ட் இங்கே தன்னை நிரூபித்துக் காண்பித்திருக்கிறார். இந்திய அணி ஒரு Transition period இல் இருக்கிறது. இந்த சமயத்தில் பண்ட் மாதிரியான ரசிகர்களை ஈர்க்கும் திறன் வாய்ந்த வீரர்கள் அத்தனை விதமான போட்டிகளிலும் நல்ல பார்மில் இருப்பது ரொம்பவே முக்கியம். Spidey is back!