
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
மாலையில் அனைவரும் ஒன்றுகூடுவதாகப் பேசிவிட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றோம். குளித்துத் தயாரானோம். காலை உணவை எங்குச் சாப்பிடலாம் என்ற பேச்சு வந்தபோது, எப்படியும் அடுத்த பத்துத் தினங்கள் மழையிலும், பனியிலும் கிடைத்ததைச் சாப்பிட்டுத் தான் வாழப் போகிறோம்.
கிளம்புவதற்கு முன்பு இங்கு இட்லி, தோசை எதாவது இருக்கிறதா என்று பார்க்கத் தங்கியிருந்த இடத்தை விட்டு, நடந்து சாலையை அடைந்தோம்.
அங்கிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் தான் மணாலி மால் ரோடு இருந்தது. சாலையின் இரு புறங்களிலும் வரிசையாக இருந்த உணவகங்கள், துணிக் கடைகளுக்கு மத்தியில் மெட்ராஸ் கஃபே என்று தமிழில் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பலகையைப் பார்த்தது, கிளம்பும் அவசரத்தில், வீட்டை கலைத்துப் போட்டுத் தேடும் பொருளொன்று கையில் கிடைத்தால் வரும் சிறு வெற்றியின் உணர்வைத் தந்தது.
இரண்டாயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் இட்லிக் கடையைத் தேடும் ஆர்வக்கோளாறுகளாக அன்று நாங்கள் இருந்தோம். உள்ளே சென்று சாம்பார் இட்லி, மசாலா தோசை, வடை எல்லாம் சொல்லிவிட்டு உட்கார்ந்தோம். பசியுடன் இருந்த எங்களுக்கு அந்த காத்திருப்பு காலம் மிக நீண்டதாகத் தெரிந்தது.
அவ்வப்போது சமையலறை பக்கம் எட்டிப்பார்த்து, அங்கிருந்த பணியாளரிடம் தோசை எப்போது வரும் எனக் கேட்டு அவரையும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தோம்.
ஆவி பறக்கும் சாம்பார் இட்லியை அவர்கள் கொண்டு வந்து மேசையில் வைத்தது தான் தாமதம். ஒரே பாய்ச்சலில் அதை முடித்துவிட்டோம். பின்னர் தோசை, வடை என்று மெனு கார்டில் இருந்த அனைத்து தென் இந்திய உணவு வகையையும் ருசிபார்த்துவிட்டுத் தான் நகர்ந்தோம். மணாலி குளிரில் மசாலா தோசை மணம் கொஞ்சம் புதிய அனுபவம் தான்.

வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டுச் சுற்றித்திரிவது சிரமம் தானே, அதனால் நேரே விடுதி அறைக்குத் திருப்பினோம். மாலை மூன்று மணி சுமாருக்கு மத்திய உணவை முடித்துக்கொண்டு, அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தோம். மால் ரோடு வீதிகளில் அவ்வப்போது பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். மக்கள் அதிகம் இருந்தும் அவ்விடம் தூய்மையாகவே இருந்ததற்கு அது ஒரு முக்கிய காரணம்.
நேரம் ஆக ஆக மாணலியின் மலைகள் பனிக்குள் மறையத் தொடங்கியது. காற்றோடு பனி மெதுவாக விரிந்து, மூடுபனியாக அப்பிராந்தியத்தைச் சூழ்ந்துகொள்ள, குளிர் உரைக்க ஆரம்பித்தது. நாங்கள் தடிமனான கையுறைகளை மட்டும் வாங்கிக்கொண்டோம்.
அடுத்தது எங்குச் செல்லலாம் என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, அருகே இருந்த ஹிடிம்பா தேவி ஆலயத்தை பற்றிச் சொன்னார்கள். ரோஜா படத்தில் அரவிந்த்சாமியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லும் காட்சிப் படம் ஆக்கப்பட்டது அந்த இடத்தில் தான். நான் அன்று வரை அது காஷ்மீரில் இருக்கும் கோவில் என்றே நினைத்திருந்தேன்.

ஒரு கிலோமீட்டர் தூரம் தான். ஆனால், சற்றே மேடான பாதை. கிட்டத்தட்ட குன்று ஏறுவதைப் போல. அதிகம் சுற்றவேண்டாம் என்று சஷாங்க் கூறியிருந்ததும் நினைவுக்கு வந்தது. ஹிடிம்பா தேவி ஆலயத்திற்கு மட்டும் சென்று விட்டு அறைக்குத் திரும்புவது என்று பேசிக்கொண்டோம்.

சுற்றிலும் பைன் மரங்கள் நிறைந்திருக்க, மத்தியில் கோவில் அமைந்திருந்தது. பிரகராத்தை சுற்றிய படிகளில் அந்த ஊர் நாய்கள் சில படுத்திருந்தன. அங்கிருப்பவை நீண்ட ரோமங்களோடு, தடித்த தோல் கொண்ட புசுபுசு வகை நாய்கள்.
அவ்விடத்தின் குளிரை தாங்கிக்கொள்ள அவைகளுக்கு அளிக்க பட்ட இன்பில்ட் ஸ்வெட்டர் அது. அவற்றுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, அறைக்குத் திரும்பினோம். அப்போது ஆறு மணி இருக்கும். மறு நாளுக்கான ஆடைகளை, தேவையானவற்றைத் தனியே எடுத்துவைத்துவிட்டுக் காத்திருந்தோம்.
ஏழரை மணி அளவில் வரவேற்பறைக்குச் சென்றோம். வரவேற்பாளர் உட்பட அங்கு யாருமே இருக்கவில்லை. ஆனால் நாங்கள் பயணிக்கப்போகும் பைக்குகள் வந்திருந்தன. ஓட்டலுக்கு முன்பு அவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஆவலாக அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது சஷாங்க் வந்தார். அவரிடம் சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மற்றவர்கள் வருவதற்குக் காத்திருந்தோம்.

சிறிது நேரத்தில் அனைவரும் அங்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், கேப்டன் என்று அனைவரும் கூடினோம். அந்த வரவேற்பறைக்குப் பக்கத்தில் தோட்டம் போல ஒரு புல்வெளி இருந்தது. அங்குப் பேசலாம் என்று கேப்டன் அழைத்துச் சென்றார். மொத்தம் 10 பேர் இருந்தோம். இன்னும் 5 பேர் அடுத்தடுத்த நாள்களில் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். அனைவரும் புல்தரையில் அமர்ந்துகொண்டோம். முதலில் கேப்டன் பேசத் தொடங்கினார்.
எங்களது நாள் எவ்வாறு கழிந்தது என்பதையெல்லாம் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிச் சில விஷயங்களைப் பேசினார். என்னுடைய சொந்த ஊர் கான்பூர். லடாக்கில் ஆறு வருடமாக இருக்கிறேன். நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பைக் பயணம் செய்துள்ளேன்.
மலையேறும் பயிற்சிபெற்றவன். அதில்லாமல் பல வருடப் பயண அனுபவமும் இருக்கிறது. நான் உங்களைப் போலப் பல குழுவினரை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் லடாக் எனக்குப் புதுப் புது அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

நாம் ஒன்றாகத் தான் இருக்கப்போகிறோம், கிடைக்கும் சமயங்களில் என்னைப் பற்றி இன்னும் அதிகம் சொல்கிறேன். இப்போதைக்கு நீங்கள் அனைவரும் எதற்காக இந்த லடாக் பயணத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை அறிய ஆவலாக இருகின்றேன். எனச் சொல்லிவிட்டு, அவரது அருகில் அமர்ந்திருந்த என்னைத் தான் முதலில் பேசச் சொன்னார். நானும் நவீனும் எங்கள் கதையை சொன்னோம்.
அதேபோல மற்றவர்களும், அவர்கள் இதற்கு முன்பு மேற்கொண்ட பயணங்களைப் பற்றியும், எதற்காக லடாக் செல்ல விருப்பம் கொண்டனர் என்பதையும் கூறினார்கள்.

கேரளாவிலிருந்து வந்திருந்தவர் அருண். இதற்கு முன்பு சிக்கிமிற்குப் பைக் பயணம் செய்திருக்கிறார். மலைகள் அவருக்கு பிடித்தமான இடம். அதன் பிறகு பேசிய நொய்டாவிலிருந்து வந்த பூஜா, சாகச பயணங்கள் எதையும் இதுவரை மேற்கொண்டதில்லை. அதனால் லடாக் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதாகச் சொன்னார். அதற்குக் கேப்டன், முதல் சாகசமே லடாக் என்றால், தைரியமான பெண் தான் எனக் கேலியாக சொல்ல, அனைவரும் சிரித்துவிட்டோம்.
ஒவ்வொருவராக பேசுவதும், அதற்கு மற்றவர்கள் எதிர்வினையற்றுவதுமாக குழுவினர் நன்றாகப் பழகத் தொடங்கியிருந்தோம். கடைசியாகப் பேசியவர் ஒருங்கிணைப்பாளர் பார்த். நாங்கள் பயணம் செய்த நிறுவனத்தில் சேல்ஸ் குழுவில் வேலை செய்பவர். அவருடைய பணி, வரும் வாடிக்கையாளருக்குப் பயணப் பரிந்துரைகளை வழங்குவது. குழுவினருடன் இந்த மாதிரியான பயணங்கள் தான் அவருடைய வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவுகிறது என்றார்.
இப்படியாக ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு முடித்துவிட்டு, கேப்டன் மீண்டும் பேசினார். பயணத்திற்கு எங்களை எப்படித் தயார் படுத்திக்கொள்வது, பயணத்திட்டம் போன்றவற்றை விளக்கினார்.
இமய மலைத்தொடர்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்குப் பரிச்சயம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், புறப்படும் முன் நீங்கள் சிலவற்றை அறிந்துகொள்வது அவசியம். நான் சொல்லப் போகும் சில விஷயங்கள் அச்சமூட்டுவதாக இருக்கலாம். உங்களைப் பயமுறுத்துவது என்னுடைய எண்ணமல்ல, இந்தப் பயணத்தை முடிந்தவரை உங்களுக்குத் தடையற்றதாக மாற்றவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

நாம் அடுத்த மூன்று நாள்களில் ஏழாயிரம் அடி உயரத்திலிருந்து பதினெட்டாயிரம் அடி உயரத்திற்குப் பைக்கில் செல்லவிருக்கிறோம். பொதுவாக உயர்ந்த இடங்களில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதனால் மூச்சு விடுவது சிரமமாகத் தோன்றும். இப்படிப் பயணம் மேற்கொள்கிறவர்கள் acute mountain sickness (AMS) ஆல் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம். தலைவலி, மயக்கம், வாந்தி, போன்றவை ஏற்படக் கூடும்.
பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து பயணம் செய்யமுடியாத நிலை உருவாகும். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவை படும். கடும் குளிர் காலங்களில் சில சமயம் உடல் நிலை நிலைமை மோசமாகி பலர் மரணித்தும் உள்ளனர். இந்தத் திடீர் தட்ப நிலைமாற்றத்திற்கு நாம் உடலைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதை இரண்டு வகையாகச் செய்யலாம். ஒன்று இயற்கையாக இந்தக் குளிருக்கு நம்மைப் படிப்படியாகப் பழக்கப்படுத்திக்கொள்வது.
இன்னொன்று diamox என்னும் மாத்திரையை எடுத்துக்கொள்வது. பொதுவாகவே இதை நான் பரிந்துரைப்பதில்லை அது ஏன் இன்று பின்னர்ச் சொல்கிறேன். இயற்கையாகவே இந்தச் சூழ்நிலைக்கு நாம் பழகுவது தான் சிறந்த முறை. அதற்கு மூன்று காரியங்களை ஒழுங்காகச் செய்யவேண்டும்.
முதலில் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வது. அடுத்தது நன்றாகத் தண்ணீர் அருந்துவது (குறைந்து இரண்டு முதல் மூன்று லிட்டர்) மூன்றாவது உறக்கம். கனவு பயணத்தை மேற்கொள்ளும் போது உற்சாகத்தின் உச்சத்தில் இருப்போம். தவறில்லை. ஆனால் குறைந்தது ஆறு மணி நேரம் ஆவது நல்ல உறக்கம் கிடைத்தால் தான் அடுத்த நாள் பயணம் சிரமமில்லாமல் இருக்கும்.
இந்த மூன்று விதிமுறைகள் கேட்பதற்குச் சுலபமாக இருக்கலாம், ஆனால் பின்பற்றுவது கடினம். இந்தப் பயணம் முடியும் போது உங்களில் உங்களில் யாராவது ஒருவர் இதை ஒழுங்காகக் கடைப்பிடித்திருந்தால் கூட அது பெரிய விஷயம். ஏனென்றால், இந்தக் கடுங்குளிரில் தண்ணீர் குடிக்கவே முடியாது.
இருப்பினும் அதை நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதே போலத்தான் தூக்கம் அவசியமான ஒன்று. நள்ளிரவு இரண்டு மூன்று மணி வரை விழித்திருந்து விட்டு, அடுத்த நாள் தூக்கத்தில் வண்டியை மலையில் சென்று மோதியவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். தூக்கத்தின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.

உங்களில் யாருக்கெல்லாம் மது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது என்று எனக்குத் தெரியவேண்டும். நாம் தங்கப் போகும் சில இடங்களில் கண்டிப்பாக இவை கூடாது, அப்படியே நீங்கள் யாரேனும் மது அருந்துகிறீர்கள் என்றால் அது நிச்சயம் என்னுடைய கவனத்திற்கு வர வேண்டும்.
நாம் இப்போது மணாலியில் இருக்கிறோம். இங்குக் குளிர் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் உயரமான altitude நோக்கி நகரப் போகிறோம். அப்போது நிலை மாறும். இங்கு 10 – 12 டிகிரி இருக்கிறதென்றால் நாம் தங்கப் போகும் இடங்களில் மைனஸ் டிகிரிகளில் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
சில வேளைகளில் மழையும் பெய்யக்கூடும். ஒவ்வொரு நூறு நூற்றைம்பது கிலோமீட்டர்களுக்கும் தட்பவெப்பநிலை மாறுபடுவதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். அதை உத்தேசித்துத் தான் தினமும் நாம் தயாராகப் போகிறோம். தினமும் மாலை ஆறு மணிக்குள் அன்றைய நாளின் இலக்கை அடையும்படி தான் நம் பயணத் திட்டம் இருக்கும்.
ஏனெனில், இரவு நேரங்களில் பைக் பயணம் என்பது சவாலானது. ஒவ்வொரு நாள் இரவும் நாம் இதே போல நாம் ஒன்றுகூடுவோம். அப்போது நான் அடுத்த நாளுக்கான நம் பயணத் திட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறுவேன். நாம் கடக்கப் போகும் தூரம், சாலைகளின் தன்மை, எத்தனை லேயர் ஆடைகளை அணியவேண்டும் என்று எல்லாமே அறிவுறுத்தப்படும். அதேபோலப் பயணத்திட்டத்தில் மாறுதல்கள் இருந்தாலும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
– ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.