
மும்பை: இந்தியா – பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக புனேவைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கைது செய்ததற்காக மகாராஷ்டிர அரசை அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், அதன் பின்விளைவுகள் தீவிரமானது என்றும் சாடியுள்ளது.
நீதிபதிகள் கவுரி கோட்சே மற்றும் சோமசேகர் சுந்தரேஷன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, மாணவியின் வழக்கறிஞரை உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டு, ஜாமீன் இன்றே வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், மாநில அரசின் இந்தத் தீவிரமான எதிர்வினை தேவையில்லாதது என்றும், மாணவி ஒருவரைக் குற்றவாளியாக்கியுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்தது.