
இன்றைக்கு விவசாயம் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பத்தோடு விவசாயத்தில் ஈடுபடுவதுண்டு.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காமினி சிங் என்ற விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். ஆனால் அவருக்கு நான்கு சுவருக்குள் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்வது பிடிக்கவில்லை. விவசாயிகளோடு சேர்ந்து வேலை செய்ய முடிவு செய்தார்.
காமினி சிங் இயற்கையான முறையில் விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க முடிவு செய்தார்.
2017-ம் ஆண்டு தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, துணிந்து விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் பணியில் களம் இறங்கினார்.
களத்தில் இறங்கிய காமினி சிங், “அதிகமான விவசாயிகள் அரசு கொடுக்கும் மானியத்திற்காக இயற்கை விவசாயியாக தங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், உண்மையில் அவர்கள் இயற்கை விவசாயம் செய்யவில்லை என்பதை அறிய முடிந்தது.
காரணம் இயற்கை விவசாயத்தில் முதல் 3 ஆண்டுகளுக்கு போதிய மகசூல் கிடைக்காது. எனவே விவசாயிகள் அதில் ஆர்வம் காட்ட தயங்கினர்.” என்று தெரிவித்தார்.
இதனால், குறைவான பராமரிப்பு உள்ள பயிர்களை விவசாயிகளுக்கு பரிந்துரைக்க காமினி சிங் முடிவு செய்தார்.
`முருங்கையில் 22 வகையான பொருள்கள் தயாரிப்பு’
இது குறித்து காமினி சிங் கூறுகையில், ”2017ம் ஆண்டு லக்னோவில் 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி அதில் முருங்கை பயிரிட்டேன். முருங்கை எந்த ஒரு சீதோஷண நிலையையும் தாங்கி வளர்ந்தது. அதோடு பராமரிப்பும் குறைவாக இருந்தது. இதனால் மற்ற விவசாயிகளிடமும் முருங்கை பயிரிட ஊக்கப்படுத்தினேன்.
அதேசமயம் விவசாயிகளின் வழக்கமான விவசாயம் பாதிக்காத வகையில் நிலத்தின் வேலியில் முருங்கை மரங்களை நடவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.
இதன் மூலம் விவசாயிகள் வழக்கமாக செய்யும் விவசாயம் பாதிக்கப்படாமல் இருந்தது. எனவே விவசாயிகள் ஆர்வத்தோடு முருங்கையை வேலிப்பயிராக நடவு செய்தனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைத்தது.
விவசாயிகள் ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் எங்களோடு இணைந்தனர். ஆனால், இன்றைக்கு 1000-க்கும் அதிகமான விவசாயிகள் எங்களோடு சேர்ந்து விவசாயம் செய்கின்றனர்.

விவசாயிகளிடமிருந்து முருங்கை இலை, முருங்கைக்காயை நாங்களே கொள்முதல் செய்து கொள்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு விளைவித்த பொருள்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படவில்லை.
நாங்கள் முருங்கையில் இருந்து ஃபேஸ் க்ரீம், ஆயில், குக்கீஸ், சோப்பு, பவுடர் போன்ற 22 வகையான பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
`விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்..’
இத்தொழிலை 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கினேன். ஆனால் இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.1.75 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் எங்களுக்கு 30 சதவீதம் லாபம் கிடைக்கிறது.
இதற்காக Doctor Moringa Pvt Ltd என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறோம். இது தவிர விவசாயிகள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய தனி அமைப்பு ஒன்றையும் தொடங்கி இருக்கிறோம்.
இப்போது விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக ரூ. 30 ஆயிரம் கூடுதல் வருவாய் எடுக்கின்றனர். அதனை ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிப்பதுதான் எங்களது இலக்கு” என்று தெரிவித்தார்.

`நல்ல மகசூல்..’ – விவசாயி
காமினி சிங் ஆலோசனையில் முருங்கை விவசாயம் செய்து வரும் அனில் குமார் இது குறித்து கூறுகையில், ”ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் முருங்கை பயிரிட்டேன். முருங்கை குறித்து போதிய அளவுக்கு எனக்கு தெரியாது. காமினி மேடம் அனைத்து உதவியையும் செய்து கொடுத்தார். ஒரு ஏக்கரில் நல்ல வருமானம் கிடைத்தது. இதையடுத்து இப்போது 17 ஏக்கரில் பயிரிட்டு இருக்கிறேன்.
நெல் மற்றும் கோதுமையில் வழக்கமாக 40 ஆயிரம் வருவாய் கிடைக்கும். ஆனால், அதே இடத்தில் இப்போது 1.5 லட்சம் கிடைக்கிறது.
முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய் இரண்டையும் விற்பனை செய்கிறேன். 30 ஆயிரம் முதலீடு செய்தேன். அதனை முதல் வருடத்திலேயே எடுத்துவிட்டேன். நல்ல மகசூல் கிடைத்தது” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.