
பாமக தலைமை இடம் விழுப்புரம் மாவட்டமாக இருந்தாலும் தருமபுரி மாவட்டத்தில் தான் பாமக-வை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் வாக்காளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதனால் தான் 2014-ல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார் அன்புமணி ராமதாஸ். 2019 தேர்தலில் இங்கு மீண்டும் போட்டியிட்ட அன்புமணி, திமுக-விடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இருந்த போதும் 2024 தேர்தலில் தனது மனைவி சவுமியாவை இங்கு நிறுத்தினார் அன்புமணி. இம்முறை திமுக வேட்பாளருக்கு சரியான போட்டியைக் கொடுத்த சவுமியா, முதல் சுற்றுகளில் முன்னணியில் இருந்தாலும் இறுதிச் சுற்றுகளில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த தேர்தல்களில் தோற்றாலும் பாமக கவுரமான இடத்தையே பெற்று வந்திருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக, தருமபுரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. அந்தளவுக்கு இந்த மாவட்டத்தில் பாமக-வுக்கு தனித்த செல்வாக்கு இன்றைக்கும் இருக்கிறது. இதை கணக்கில் வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சவுமியா அன்புமணியை இந்த மாவட்டத்தில் ஏதாவதொரு தொகுதியில் நிறுத்தி பல்ஸ் பார்க்க தயாராகி வருகிறது பாமக தலைமை.