
கர்நாடக மாநிலம், மாண்டியாவின் மத்தூர் தாலுகாவில் இருக்கிறது கோரவனஹள்ளி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அசோக் – வாணிஷ்ரி தம்பதியினரின் மகள் ஹிருத்திக்ஷா (4). இவர் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாய் ஒன்று கடித்திருக்கிறது. இதை அறிந்த பெற்றோர் சிறுமியை பைக்கின் முன்பகுதில் அமரவைத்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது போக்குவரத்துக் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாமல் வேகமாகச் சென்ற அசோக்கை காவல்துறையினர் நிறுத்த முயன்று, பைக்கின் ஹேண்டிலை பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இதனால் சமநிலையிழந்த அசோக்கும் அவரின் குடும்பத்தினரும் கீழே விழுந்தனர். இதில் ஹிருத்திக்ஷா காயமடைந்தார். உடனே அவரை ஆட்டோவில் மாண்டியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து சிறுமி உயிரிழந்ததற்கு காவல்துறை அதிகாரிகள்தான் காரணம் என அசோக்கின் உறவினர்களும், அவரின் ஊர் மக்களும் சிறுமியின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மூன்று உதவி துணை ஆய்வாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, “மாண்டியாவில் ஒரு குழந்தையின் மரணம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. போக்குவரத்து போலீசார் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருந்தால், சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்கலாம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.