
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.
தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகும் போராட்டங்களுக்குப் பிறகும்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பிரிஜ் பூஷன் மீது புகார்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.
அதில் ஒன்று, தனது மகள் மைனராக இருந்தபோது பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனையின் தந்தை புகார் அளித்திருந்தார்.
இருப்பினும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு (ஜூன்), அந்தப் பெண் தனது வாக்குமூலத்தின் ஒரு பகுதியாக, ஒரு மாஜிஸ்திரேட் முன் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றார்.
அதனால், புகார்தாரர் வாபஸ் பெறுவதற்கான முடிவு கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்டதா என்பதை விசாரிக்க ஜூலையில் மல்யுத்த வீராங்கனை மற்றும் அவரின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதையடுத்து, ஆகஸ்டில் அடுத்தடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணைகளில் திருப்தி அடைந்து, வழக்கு விசாரணையை முடித்து வைக்க புகார்தாரர் தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் சிறப்பு POCSO நீதிபதி கோமதி மனோச்சா முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில், விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டு, பிரிஜ் பூஷனை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட 500 பக்க அறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு, நீதிபதி கோமதி மனோச்சாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் மீதான இந்த போக்சோ வழக்கை ரத்து செய்ய டெல்லி காவல்துறைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.