
வைட்டமின் பி12 குறைபாடுப் பற்றிய விழிப்புணர்வு சமீப வருடங்களாகத்தான் அதிகரித்திருக்கிறது. உடலுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் ஒரு மைக்ரோ சத்து இந்த பி 12. பல உடல் உபாதைகளுக்கு ஆரம்பமாக விளங்குவது வைட்டமின் பி12 குறைபாடே. இந்தக் குறைப்பாட்டை பற்றியும் அவற்றைக் கண்டறியும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
உடலுக்குத் தேவையான வைட்டமின்களை, நாம் பெரும்பாலும் உணவின் மூலமாகவே எடுத்துக்கொள்கிறோம். இவற்றில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க ஒன்று. வைட்டமின் பி12 தானியம் சார்ந்த உணவுகள், முட்டை, மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் ஆகியவற்றில் நிரம்பி காணப்படுகிறது. பெரும்பான்மையான வைட்டமின் பி12 குறைபாடு இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பெரும் அளவில் உட்கொள்ளாமல் இருப்பதாலும், காலை உணவு தவிர்ப்பதாலுமே வருகிறது.
பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் பி12 குறைபாடு அதிகம் வருகிறது. ஏனெனில் இவர்கள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள தவறுவார்கள். இவர்களது உடலில் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதால், உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சப்படுவது குறைகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ரத்த சோகை ஏற்படும். மேலும் உடல் சோர்வு, கவனச்சிதைவு, பாத வலி, வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறுவது, படிப்பில் ஆர்வமின்மை, உடல் மெலிந்துக் காணப்படுவது போன்றவை வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள்.
நோய் தாக்கத்தினைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் எடுத்துக்கொண்டால், மாத்திரையில் உள்ள சத்துக்கள் சிறுநீரில் வெளியேற தொடங்கி விடும். பி 12 சத்தை ஊசியாகவும் போட்டுக்கொள்ளலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சாக மாறிவிடும். இதைப் பார்த்து பயந்துவிட வேண்டாம். இது சாதாரணமான ஒன்றே. வைட்டமின் பி12 மருந்துகளால் பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது.
ரத்தப்பரிசோதனை மூலமாகவே வைட்டமின் பி12 குறைபாட்டினைக் கண்டறிந்துவிட முடியும் என்பதால், நான் மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பி 12 பரிசோதனை செய்து தீர்வை நாடுங்கள்” என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.