
புதுடெல்லி: சவுதி அரேபியாவிலிருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோ விமான நிலையம் வந்தடைந்த 6 பேர், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பழைய சுங்கச்சாவடி அருகே சென்ற அந்த காரை, போலீசார் என்று கூறிக் கொண்ட இரண்டு சகோதரர்கள் கடத்தி உள்ளனர். ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரையும் அப்பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களின் வயிற்றில் தங்கம் இருப்பதை அறிந்து அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே அங்கிருந்து தப்பிய கார் ஓட்டுநர், உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். கிராம மக்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் முராதாபாத் மற்றும் ராம்பூர் போலீஸார் சம்பவ இடத்துகு விரைந்துள்ளனர். பண்ணை வீட்டை சுற்றி வளைத்தபோது துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இறுதியில் 2 சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலால், காரில் பயணித்த அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரின் வயிற்றில் 29 தங்க கேப்ஸ்யூல்கள் (மாத்திரை) இருப்பது தெரியவந்தது.