
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழைக்கு ஊட்டியில் 4 வீடுகள் மற்றும் கூடலூரில் 300 வாழைகள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக ஒரு சுற்றுலா பயணி மரம் விழுந்து உயிரிழந்தார். மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுகின்றன. சூறாவளி காற்றினால் சாலைகளில் மரங்கள் விழுவதால் போக்குவரத்து தடைபடுகிறது. மேலும், மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்படுகிறது.
கன மழை காரணமாக அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மில்லிமீட்டர் மழையும், அப்பர் பவானியில் 298 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நீர்நிலைகள் அதிவேகத்தில் நிரம்பி வருகின்றன. முத்தோரை பாலாடா சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட், பூண்டு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.