
கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க எதிரிப் படைகளால் கடலுக்கடியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தை இந்தியா மீண்டும் மும்முரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அண்டை நாடான சீனாவுடன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை தொடங்க உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: எதிரி நாட்டு படைகளால் துறைமுகங்களை அழிக்கவும், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் வணிகத்தை சீர்குலைக்கவும் நீருக்கடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றவும், கண்காணிக்கவும் கடற்படைக்கு ரூ.44,000 கோடியில் 12 மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி கப்பல்களை (எம்சிஎம்வி) கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் விரைவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சிலின் முன் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது.