• May 26, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலம் கொச்சி, கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியதை அடுத்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லைபீரியக் கொள்கலன் கப்பல் எம்எஸ்சி எல்சா 3 (Iஎம்ஓ எண். 9123221), கொச்சி கடற்கரையில் 640 கொள்கலன்களுடன் மூழ்கியது.

அதிலிருந்து 24 பணியாளர்களும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

இந்த நிலையில் அந்தக் கப்பலில் 13 ஆபத்தான சரக்கு கொள்கலன்களும் ,12 கால்சியம் கார்பைடு கொள்கலன்களும் இருந்ததாக கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. மேலும் கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய்யும் இருந்துள்ளது.

இதனை அடுத்து மாநில அரசு, கடற்கரையோரப் பகுதிகளுக்கு, ஒரு எச்சரிக்கையை விடுத்தது.

அங்கு மூழ்கிய கப்பலின் கொள்கலன்கள் பலத்த காற்று மற்றும் நீரோட்டத்தில் கரையை அடைய வாய்ப்புள்ளது. மேலும், கப்பலில் இருந்து எண்ணெய் படலம் கேரள கடற்கரையில் எங்கும் பரவக்கூடும் என்பதால், அதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS), எண்ணெய் மாசுபாடு வெளியிடப்பட்ட 36-48 மணி நேரத்திற்குள் ஆலப்புழா, அம்பலப்புழா, ஆரட்டுப்புழா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய கடலோரப் பகுதியை அடையலாம் என்று கூறியிருக்கிறது.

இந்தக் கடலோர மண்டலங்கள் மாசுபடும் அபாயத்தில் உள்ளன என்றும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *