
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.
இதற்கான அணியை BCCI-யின் தேர்வுக்குழு நேற்று முன்தினம் (மே 24) வெளியிட்டது. அதில், இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், புதிய துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சாய் சுதர்சன், அர்ஷதீப் சிங் ஆகியோர் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகள், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி, நடப்பு ஐ.பி.எல் என தொடர்ச்சியாக ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வுசெய்யப்படவில்லை.
அதேபோல், பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு போட்டியில்கூட ஆடவைக்கப்படாத சர்ஃபராஸ் கானும் டெஸ்ட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார்.
இதனால், வருடக்கணக்கில் உள்ளூர் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதால் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளித்து, அதில் சிறப்பாகச் செயல்பட்டதும் வெறுமனே பெயருக்கு பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அழைத்துச் சென்று அங்கு வாய்ப்பே கொடுக்காமல் பென்ச்சில் அமரவைத்துவிட்டு இப்போது அணியிலிருந்து கழற்றிவிட்டிருப்பது நியாயமே இல்லை எனத் தேர்வுக்குழுவைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து இந்திய வீரர் புஜாரா, “அணியில் அவர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம், அவர் இந்தியா அல்லது ஆசியா கண்டிஷன்களில் வெற்றிகரமாக இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ அவரால் அந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்க முடியாது என்று நிர்வாகம் நினைக்கிறது.

கடந்த காலங்களில் அவருக்கு ஃபிட்னஸ் பிரச்னைகள் இருந்தன. அவரின் தற்போதைய ஃபிட்னஸ் பற்றி எனக்குத் தெரியாது.
இருப்பினும், தனது உடற்தகுதிக்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். எனவே, இந்த நேரத்தில் இது கொஞ்சம் துரதிர்ஷ்டவசமானதுதான்.
அதேசமயம், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட கருண் நாயர் இந்த வாய்ப்புக்குத் தகுதியானவர்தான்.” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
2023-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு புஜாரா டெஸ்ட் அணியில் தேர்வுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.