
சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில் மே 30-ம் தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம். தவறினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.