• May 26, 2025
  • NewsEditor
  • 0

ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய முகங்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி. இவர் பிறந்து, வளர்ந்த ஊர் குஜராத்தின் வதோதரா.

இன்று பிரதமர் மோடி வதோதராவில் ரோடு ஷோ மேற்கொண்டிருந்தார். அங்கே அவருக்கு பெருந்திரளான மக்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கூட்டத்தின் மத்தியில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பிரதமர் மோடி ரோடு ஷோவில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பம்

மோடியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறித்து கர்னல் சோபியாவின் தங்கை, “பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்றது எங்களுக்கு பெருமையான தருணம் ஆகும். நமது பிரதமர் எப்போதுமே முன்னிலை வகித்து, அவர் மக்களுடன் எப்போதும் நிற்கிறார் என்கிற நம்பிக்கையைத் தருகிறார்.

பிரதமர் மோடி எங்களைக் கடக்கையில் எங்களுக்கு தலை குனிந்து வணக்கம் கூறினார். நாங்களும் பதிலுக்கு வணக்கம் கூறினோம். அந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரது இந்தச் செய்கை, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், எதற்கும் பயப்படாதீர்கள் என்று உலகத்திற்கு கூறுவதைப் போல இருந்தது.

சோபியா நாட்டிற்காக ஏதாவது செய்யும்போது, அது எனக்கு மட்டுமல்ல… பிறருக்குமே ஊக்கமாக உள்ளது. அவர் இனி எனக்கு மட்டும் சகோதரி அல்ல… இந்த நாட்டிற்கே சகோதரி” என்று பேசியுள்ளார்.

கர்னல் சோபியா குறித்து அவரது சகோதரர் சஞ்சய் குரேஷி கூறியதாவது, “என்னுடைய சகோதரிக்கு இந்த வாய்ப்பை அளித்த இந்திய அரசிற்கும், இந்திய பாதுகாப்புப் படைக்கும் நன்றி. மற்ற பெண்களுக்காக ஒரு பெண் நடவடிக்கை மேற்கொள்வதை விட சிறந்தது எது? ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை நமது படை எதிரிகளுக்கு காட்டியுள்ளது” என்று பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *