
வதோதரா: குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வதோதராவில் வாகனப் பேரணி நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் காத்திருந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். சாலையோரத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர் நின்றுகொண்டு பிரதமரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். பிரதமரின் வாகனம் அவர்கள் அருகே வந்தபோது, அவர்கள் பூக்களை பிரதமர் மோடி மீது தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமரும் அவர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு மகிழ்ச்சி தெரிவித்தார்.