
சூதாட்டத்துக்கு வித்திடும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய செயலிகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்கள் மூலம் ‘சூதாட்டம் விளையாடுவதால் பல தற்கொலைகள் நிகழ்கிறது’ என குறிப்பிட்டு, சூதாட்டத்துக்கு வித்திடும் பந்தய செயலிகளை ஒழுங்கு செய்ய வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என டாக்டர் கிலாரி ஆனந்த் பால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நீதிபதி சூர்யகாந்த் சர்மா மற்றும் நீதிபதி கோடிஸ்வர் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சூதாட்ட செயலிகளை ஆதரித்து விளம்பரப்படுத்திய பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் ஆனந்த் பால், தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார். “தெலங்கானாவில் இறந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் சகோதர சகோதரிகளின் சார்பாக நான் இங்கு நிற்கிறேன்.
தெலங்கானாவில், சமீப காலமாக, சுமார் 2 மாதங்களுக்கு முன், 1023 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், 25 பாலிவுட், டோலிவுட் நடிகர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் மீது தெலங்கானா காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. செல்வாக்கு மிக்கவர்கள் அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருகின்றனர். நமது நாட்டின் 60% மக்கள்தொகை 25 வயதுக்கு குறைவானவர்களே ஆவர்.

மொத்த 900 மில்லியன் மக்கள்தொகையில், 300 மில்லியன் பேர் சட்டவிரோதமாக, ஒழுக்கக்கேடாக, நெறிமுறையின்றி சூதாட்டத்தில் சிக்கி அடிப்படை வாழ்வுரிமையை தொலைத்து வருகின்றனர். “கிரிக்கெட்டின் கடவுள்” என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரே சூதாட்ட செயலிகளை ஆதரிக்கும் நிலையில், அவர் ஆதரவை நம்பி, சுமார் ஒரு பில்லியன் மக்கள் சூதாட்ட செயலிகளை நல்ல செயலி என நம்புகின்றனர்.
மேலும், பிரபலங்களின் ஆதரவுகளை நம்பி, சூதாட்டத்தில் வாழ்வை தொலைக்கும் இளம், அப்பாவி நபர்கள் மீது ஏற்படும் தீய விளைவுகளை நீதிமன்றம் கவனிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு என்ன செய்து வருகிறது?
மனுதாரரின் வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதி சூரியகாந்த், “ஐபிஎல் பார்க்கும் ஆயிரக்கணக்கானோர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிரிக்கெட்டின் கடவுளுக்கும் தெரியும். மத்திய அரசு என்ன செய்து வருகிறது என கேட்போம். இந்த பிரச்னையை சட்டத்தின் வாயிலாக தீர்க்க இயலாது. மக்கள் தானாக முன்வந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை நாம் என்ன செய்ய முடியும்? நாங்கள் உங்கள் வாதங்களை ஆதரிக்கிறோம்.

ஆனால், சட்டத்தின் மூலமாக மட்டுமே சூதாட்டத்தை நிறுத்த இயலும் என்பது தவறான எண்ணம். கொலை செய்பவரை தண்டிக்க பிரிவு 302 ஐபிசி இருக்கிறது. ஆனால், மரண தண்டனையே கொடுத்தாலும் சமூகத்தில் கொலையை உங்களால் தடுக்க முடிந்ததா?’ என குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். முதலில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். தேவைப்பட்டால் பின்னர் மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பலாம்” என்றார்.
தற்போது, பதில் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.