
நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பரவலாக 2,599.60 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அவலாஞ்சியில் 353 மில்லிமீட்டர்
அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மில்லிமீட்டர் மழையும் அதற்கு அடுத்தபடியாக அப்பர் பவானியில் 298 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நீர்நிலைகள் அதிவேகத்தில் நிரம்பி வருகின்றன. முத்தோரை பாலாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட், பூண்டு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக மூடல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட ஒருசில சுற்றுலாத்தலங்கள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தாலும், 8 வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்திருக்திறது.

நீலகிரி மழை பேரிடர் வரலாற்றில் முதல் முறையாக அரசு தாவரவியல் பூங்கா மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கரையோர பகுதிகளில் மக்கள் நடமாட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். ஆங்காங்கே சாலைகளில் பெயர்ந்து விழும் மரங்களை அவ்வப்போது அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.