
சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில், சிறந்த லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவின் மூலம் சில ஒளிப்பதிவாளர்கள் கவனிக்கப்பட்டனர். அதில் இருவர், ஆங்கிலோ – இந்திய ஒளிப்பதிவாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்கஸ் பார்ட்லி (Marcus Bartley) மற்றும் ஆடி இரானி (Adi Irani).
இதில் மார்கஸ் பார்ட்லி, பாதாள பைரவி (1951), மிஸ்ஸியம்மா (1955), மாயா பஜார் (1957), செம்மீன் (1965) உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மலையாளம், இந்திப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஆடி இரானி, சேதுமாதவன் இயக்கிய ஞான சுந்தரி மற்றும் இந்தி, தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த தமிழ்ப் படம், ‘லாவண்யா’.