• May 25, 2025
  • NewsEditor
  • 0

‘அசத்தல் சிஎஸ்கே!’

சீசன் முழுவதும் கொடுக்காத சிறப்பான பெர்பார்மென்ஸை சீசனின் கடைசி போட்டியில் கொடுத்திருக்கிறது சென்னை அணி. பிசிறே இல்லாமல் ஆடி குஜராத் அணி ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.

GT vs CSK

‘தோனியின் விருப்பம்!’

அடுத்த சீசனுக்கான காம்பினேஷன் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் தோனியின் விருப்பமாக இருந்தது. மேலும், பேட்டர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் சரியாக ஆட வேண்டும், பௌலர்கள் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதையும் அழுத்தி அழுத்தி கூறிக்கொண்டே இருந்தார். தோனி கூறியவற்றில் பெரும்பாலானவை இந்தப் போட்டியில் நடந்திருந்தது.

‘அதிரடி பேட்டிங்!’

சென்னைதான் முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனிங்கில் தெறியான மொமண்டம் கிடைத்தது. ஆயுஷ் மாத்ரே வெளுத்து வாங்கியிருந்தார். அர்ஷத் கான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே 28 ரன்களை பறக்கவிட்டார். கான்வே ஆயுஷ் மாத்ரேவுக்கு உதவியாக செகண்ட் பிடில் ஆடிக்கொண்டிருந்தார். ஆயுஷ் மாத்ரே 34 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் அவுட் ஆகியிருந்தார்.

Ayush Mhatre
Ayush Mhatre

நம்பர் 3 இல் உர்வில் படேல் வந்தார். ஆயுஷ் விட்ட இடத்திலிருந்து அவர் தொடர்ந்தார். கான்வே அவருக்கும் உறுதுணையாக இருந்தார். கான்வே நின்றுவிட்டதால் விக்கெட்டுகள் மளமளவென விழுவதையும் சென்னை தவிர்த்தது. பவர்ப்ளேயில் மட்டும் சென்னை அணி 68 ரன்களை அடித்திருந்தது. கோட்சியா, ரஷீத் கான், சாய் கிஷோர் என பாரபட்சமே பார்க்காமல் குஜராத்தின் பௌலர்களுக்கு எதிராக உர்வில் படேல் பெரிய ஷாட்களை ஆடினார். அவரும் 37 ரன்களில் அவுட் ஆகி சென்றார்.

10 ஓவர்கள் முடிகையில் சென்னை அணி 115 ரன்களை எடுத்திருந்தது. நல்ல தொடக்கம். இது அப்படியே தொடருமா என சந்தேகம் இருந்தது. ஆனால், இரண்டாவது 10 ஓவர்களிலும் சென்னை அணி 115 ரன்களை எடுத்தது. ரஷீத் கானையெல்லாம் அட்டாக் செய்து கான்வே அரைசதத்தைக் கடந்து அவுட் ஆனார்.

Dewald Brevis
Dewald Brevis

நம்பர் 6 இல் வந்த டெவால்ட் ப்ரெவிஸ் சூறாவளியாக சுழன்றடித்தார். சிராஜ், கோட்சியா போன்ற பௌலர்களின் ஓவர்களில் சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டு 19 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.இவரின் அதிரடியான பினிஷிங்கால் சென்னை அணி 230 ரன்களை எடுத்தது.

CSK
CSK

‘கட்டுக்கோப்பான பௌலிங்!’

குஜராத்துக்கு 231 ரன்கள் டார்கெட். குஜராத்துக்கு அவர்களின் டாப் ஆர்டர்தான் பெரிய பலமே. அதை வைத்துதான் எல்லா போட்டிகளையும் வெல்வார்கள். ஆனால், இன்றைக்கு சென்னை அணி பவர்ப்ளேயில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது. கில் மற்றும் ரூதர்போர்டின் விக்கெட்டை அன்ஷூல் கம்போஜூம் பட்லரின் விக்கெட்டை கலீல் அஹமதுவும் வீழ்த்தியிருந்தனர். கில், பட்லர் இருவருமே கொஞ்சம் ஷார்ட்டாக வந்த பந்துக்கு பேட்டை விட்டு அவுட் ஆகி வெளியேறினர்.

பவர்ப்ளேயில் குஜராத் அணி 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ‘பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க வேண்டும். ரன் கொடுக்கக்கூடாது.’ என இதைத்தான் தோனி சீசன் முழுக்க சொல்லிக்கொண்டே இருந்தார். இன்றுதான் அது நடந்தது. பவர்ப்ளேக்குப் பிறகே குஜராத்துக்கு தேவைப்பட்ட ரன்ரேட் 12 க்கும் மேல் சென்றுவிட்டது. அழுத்தம் கூடியது.

CSK
CSK

சாய் சுதர்சனும், ஷாருக் கானும் நின்று ஆடி பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர். ஆனால், இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி அசத்தினார் ஜடேஜா. இதன்பிறகு ஆட்டம் மொத்தமும் சென்னையின் கையில். சிவம் துபே, தீபக் ஹூடாவுக்கெல்லாம் ஓவர் கொடுத்து ஜாலியாக 147 ரன்களில் குஜராத்தை ஆல் அவுட் ஆக்கினர். 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Dhoni
Dhoni

சென்னை அணி எப்படி ஆட வேண்டும் என ரசிகர்கள் நினைத்தார்களோ அப்படியே ஆடியிருக்கின்றனர். 10 வது இடத்தை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அடுத்த சீசனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அடையாளம் கண்டு எடுத்துச் செல்கிறது சிஎஸ்கே. கம்பேக் கொடுப்பது சிஎஸ்கேவுக்கு கை வந்த கலை. அடுத்த சீசனில் தெம்பாக வந்து கர்ஜியுங்க மஞ்சள் பாய்ஸ்!

நீங்கள் CSK வுக்கு கொடுக்க நினைக்கும் டிப்ஸ் என்ன என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *