
புதுடெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை ஒன்றில் மழைநீர் தேங்கி இடிந்து விழுந்தது. இதனால் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது.
மழைநீர் தேங்கி கூரை இடிந்து விழும் வீடியோவை கேரளா காங்கிரஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஒரு தூரலுக்கு பின்பு டெல்லி விமான நிலையத்தில் விகாஸ் (வளர்ச்சி) நிரம்பி வழிகிறது எனப் பதிவிட்டுள்ளது. பகிரப்பட்ட வீடியோ விமான நிலையத்தில் இருந்த ஒரு பார்வையாளரால் எடுக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லி விமானநிலையத்தில் மழை பெய்துகொண்டிருக்கும் போது ஒரு மேற்கூரையில் மழை நீர்தேங்கி நிற்கிறது. இதனால் அந்தக் கூரையில் கிண்ணம் போன்ற அமைப்பு உருவாகி மழைநீரைத் தாங்கிநிற்கிறது. ஒரு கட்டத்தில் மழைநீரின் கனம் தாங்காமல் கூரை கிழிந்து விழ மழை நீர் புகுந்து விடுகிறது.