• May 25, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஓர் அடையாளப் போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை. தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியைக் கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியதும் முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய பொறுப்பு, கடமை. பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசு ஆளுநர் மூலமாக நெருக்கடி தருவது என்பதைத் தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டே இதைச் செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது, ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் நிதியைத் தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது, தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம். பா.ஜ.க, தி.மு.க-வோடு நெருங்கி விடக்கூடாது… நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அ.தி.மு.க-விடம் வெளிப்படுகிறது. தி.மு.க மதச்சார்பற்ற கூட்டணியைத் தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை.

thol.thirumavalavan

அது, எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். ஆனால், தி.மு.க மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்றல்ல. இட்டுக் கட்டி எழுதப்பட்ட ஒன்றல்ல… வரலாற்று தரவுகளுக்கு முரணானவை அல்ல. அதில் என்ன ஐயம் இருக்கிறது?. அதில், முரணான தகவல் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். அவ்வாறு இன்றி அதனைத் திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் அல்லது காழ்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. தற்காலிகமாக ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், வரலாறு என்றைக்கும் வரலாறுதான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன தமிழர் தொன்மையும், தமிழர் நாகரிகமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. ஆகவே, புதையுண்டது புதையுண்டதாகவே இருந்துவிடாது. அது, மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கான சான்றுதான் கீழடி. தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனித் திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு, கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை, வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால், போலியான கதையாடல் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கீழடி, அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை. இருந்தாலும் வட இந்தியர்கள் வேண்டுமென்றே தங்களது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய போக்கை கடைப்பிடிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் யார் என்பதை அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

இந்தியின் மீது அவர்களுக்கு இருக்கும் வெறியை, இந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல. யூ.பி.எஸ்.சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாதியை ஒழிப்பதற்கு, சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்?. வெறுமன தி.மு.க மீது குற்றச்சாட்டு வைப்பதற்காகப் பேசுகிறாரா என்பது குறித்து விளக்கம் தேவை. அப்படி, அதிக அளவிலான சாதிய முரண் இருக்குமானால் அதை ஒழிக்க ஒன்றிய அரசும் அவர் சார்ந்திருக்கின்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் என்ன செய்யப் போகிறது என்பது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும். எல்லா ஆபாச தளங்களும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் சூழலில் உள்ளது. அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் மத்திய அரசு விதிக்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ வயதை எட்டாத டீன் ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *