
திருவனந்தபுரம்: கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைபீரியக் கொள்கலன் கப்பல் எம்எஸ்சி எல்சா 3 (Iஎம்ஓ எண். 9123221) இன்று (மே 25, 2025) காலை 0750 மணியளவில் கொச்சி கடற்கரையில் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டனர். 21 பேரை இந்தியக் கடலோரக் காவல்படையும் மூன்று பேரை இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதாவும் மீட்டன. எம்எஸ்சி எல்சா 3 கப்பல் 640 கொள்கலன்களுடன் மூழ்கியது. அவற்றில் 13 ஆபத்தான சரக்குக் கொள்கலன்களும் 12 கால்சியம் கார்பைடு கொள்கலன்களும் இருந்தன. அதில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் ஆகியவையும் ஏற்றப்பட்டிருந்தன.