
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் தற்போது வரை பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது .
உயிரிழந்த சிறுவன்
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள், வருவாய்த்துறையினர் என ஒட்டுமொத்த அரசுத்துறைகளும் களத்தில் நின்று முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொட்டபெட்டா காட்சி முனை, ஊட்டி படகு இல்லம், பைக்காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் மக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள 8 – வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், ” கேரள மாநிலம் கேலிகட் பகுதியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் இன்று காலை 8 – வது மயில் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக திடீரென மரம் ஒன்று முறிந்து 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆதி தேவ் மீது விழுந்துள்ளது.

பலத்த காயம் ஏற்பட்ட சிறுவனை ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மரங்கள் அடர்ந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் பலரும் நடமாடி வருகின்றனர். அவசிய தேவைகளைத் தவிர வெளியில் நடமாடுவதை இன்றும் நாளையும் மக்கள் தவிர்க்க வேண்டும்” என்றனர்.