
மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.
திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
வெளியில் இருந்த மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.
பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அபிநயா
மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டி விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், “அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும் நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1-ம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.

இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்தச் சென்றவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் தவித்த அவருக்கு தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்” என்றனர்.
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.