
‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர்.
சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
விழாவில் மணிரத்னம் பேசும்போது, “நான் நன்றி சொல்லணும்னா, கே. பாலசந்தர் சார்ல இருந்து ஆரம்பிக்கணும். அவர்தான் நான் சினிமாவுக்கு வர்றதுக்கு காரணம். இப்போ பாடலுக்கான சூழல் குறைவாக இருக்கு. கதை சொல்லல் மாறியிருக்குனு ரஹ்மான் சார்கிட்ட சொன்னேன். இந்தப் படத்துல ஐந்துப் பாடல்கள்தான் இருந்தது. நான் சொன்னதை கேட்டப் பிறகுதான் அவர் 9 பாடல்களாக மாத்திட்டாரு. சினிமா ஆசையோடு முதன்முதல்ல நான் கமல் சாரை சந்திக்கப் போனப்போ அவர்கிட்ட சில விஷயங்கள் பேசினேன்.
அப்புறம் ஒரு நாள் அவருடைய அண்ணன் சாருஹாசன் கூப்பிட்டாரு. அவர் என்னை மகேந்திரன் சார்கிட்ட கூடிட்டு போனாரு. எனக்கு மகேந்திரன் சாரை ரொம்ப பிடிக்கும். அவரை நாங்க பார்க்கப்போனப்போ கப்பல்ல ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தாரு. அப்போ அவர் ‘நான் கப்பல்ல இருந்து வர்றேன். பீர் சாப்பிடலாமா’னு கேட்டு அவரும் சாருஹாசன் அண்ணனும் பீர் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடி போன என்கிட்ட பீர் சாப்பிடுறீயானுகூட அவங்க கேட்கல (சிரித்துக் கொண்டே…).

மகேந்திரன் சார்’ உனக்கு நான் பண்ணின ஒரே நல்ல விஷயம் அதுதான்’னு சொல்வாரு. அப்புறம் கமல் சார் ஒரு ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து அதுக்கு திரைக்கதை பண்ணச் சொன்னாரு. நான் மூணு நாள்ல முடிச்சிட்டு போனேன்.
அதை பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன். நான் புரியாத மாதிரி அந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். இன்னைக்கு வரைக்கும் நான் சொன்ன கதையை வச்சு அவர் என்னை கிண்டல் பண்ணுவாரு. அப்போதான் நான் நினைச்சேன். வரணும்னா முட்டி மோதி நம்மதான் வரணும். அந்த போராட்டங்களுக்குப் பிறகுதான் எனக்கு பெரிய ஒப்பனிங் கிடைச்சது.
அப்போதான் கமல் சார் எனக்கு நாயகன் கொடுத்தாரு. அதுதான் எனக்கு பிரேக் கொடுத்தது. அந்தப் படம்தான் என்னை சுதந்திரப்படுத்தியது. அதுவரைக்கும் தயாரிப்பாளர்கள் உனக்கு எதுவும் தெரியாது. நான் சொல்றதை பண்ணுனு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்ககூட ஒவ்வொரு படமும் போராட்டம்தான். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு எங்களுக்கு தெரியாது, நீங்க படம் பண்ணுங்கனு சொன்னாங்க. இந்தப் படத்தை கொடுத்ததுக்கும் நன்றி கமல் சார்!” என்றார்.