• May 25, 2025
  • NewsEditor
  • 0

‘மதுரையில் பண்டரி’

மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோயில் பிரசித்திபெற்றது. பல்வேறு மாநில மக்களும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். அக்கோயிலைப் போன்ற அமைப்புடன் நாம சங்கீர்த்தனத்துடன், ‘மதுரையில் பண்டரி’ என்ற நிகழ்வு 5 நாள்கள் நடைபெற உள்ளது.

மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் `பகவன் நாம பிரசார மண்டலி’ நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர் வரவேற்றார்.

மதுரை `ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம்’ பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், அழைப்பிதழின் பிரதியை வெளியிட மதுரை `அனுஷத்தின் அனுக்கிரகம்’ நிறுவனர் நெல்லை பாலு பெற்றுக்கொண்டார்.

அழைப்பிதல் வெளியிடுதல்

தொடர்ந்து ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல புண்ணிய தலங்கள் நாட்டில் உள்ளன. எல்லோராலும் எல்லா புண்ணியத் தலங்களுக்கும் சென்று தரிசிக்க முடிவதில்லை. தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பண்டரிநாதன் மதுரையில் எழுந்தருள வருகிறார்.

ரிஷிகேஷ், பத்ராச்சலம், அயோத்தி, பூரி, உடுப்பி, துவராகா, மதுரா உள்பட பல புண்ணியத் தலங்களைத் தொடர்ந்து, ‘மதுரையில் பண்டரி’ நிகழ்ச்சி 5 நாள்கள் நடக்கிறது. மே 28 ஆம் தேதி மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் பகவான் நாம பிரசார மண்டலி சார்பில் இந்நிகழ்வு தொடங்குகிறது.

பண்டரிபுரம் கோயில் அர்ச்சகர்கள் வருகை

பண்டரிபுரம், பாண்டுரங்கன் ருக்மணி கோயில் போலவே இங்கும் அமைத்து தினமும் அந்தக் கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடக்க உள்ளன. பண்டரிபுரம் கோயில் பூஜகர்களே, இங்கும் பூஜைகள் செய்ய இருக்கிறார்கள்.

இசையோடு நாம சங்கீர்த்தனம், வழிபாடு

தினமும் பாகவத இசையோடு பகவான் நாம சங்கீர்த்தனமும் நடக்க இருக்கிறது. இதில், நாடு முழுவதுமிருந்து, பிரபலமான 100 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

முதல் நாளில் மகாசண்டி யாகம், மீனாட்சி திருக்கல்யாணம், 108 கன்னியா பூஜை, சுமங்கலி பூஜையோடு விசேஷ சாளக்கிராம பூஜையும் நடக்க இருக்கிறது.

நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 1008 சாளக்கிராமங்களை வைத்து பூஜை செய்து, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க இருக்கிறார்கள். வேத பாராயணம், ருத்ர பாராயணம், சஹஸ்ரநாம பாராயணங்களும் நடக்க இருக்கிறது.

மதுரையில் பண்டரி நிகழ்வு

அன்னதானம்

இந்தநிகழ்வில் மருதாநல்லூர் சத்குரு ஸ்ரீ கோதண்டராம சுவாமிகள், பிலாஸ்பூர் ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், விசாகப்பட்டினம் சௌபாக்கிய புவனேஸ்வரி பீடம் ராமானந்த பாரதி மகாசுவாமிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும், இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பல துறவிகள், பாகவதர்கள், பக்தர்கள் பங்கேற்கிறார்கள். தினமும் அன்னதானம் வழங்கப்படும்” என்றார்.

பகவன் நாம பிரசார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர், பொருளாளர் விஸ்வநாதன், கமிட்டி உறுப்பினர்கள் விஜயகுமார், வைத்தியநாதன், ஸ்ரீ சக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பரத், பிரகாஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *