• May 25, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போது அதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால் எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்பை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அதை நீக்கிவிடுமாறும் சொல்கிறார்.  என்னுடைய தோழிகள் சிலரும் இதுபோல வேறு வேறு பிரச்னைகளுக்காக கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்கள். பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை என்றாலே, கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா…?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்  

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பீரியட்ஸ் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் கர்ப்பப்பையை அகற்றுவது தீர்வாகாது. அது அவசியமும் இல்லை. எனவே, முதலில் உங்களுக்கு பீரியட்ஸின் போது அதிக ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை  கண்டறிய வேண்டும். அதற்கேற்பவே சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும்.

ஸ்கேன் செய்து பார்த்து ஃபைப்ராய்டு கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து அடினோமயோசிஸ் பாதிப்பு இருக்கிறதா என்றும் கண்டறிய வேண்டும். 

அடினோமயோசிஸ் (Adenomyosis) என்றால் கர்ப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும்.  அதுதான் அடினோமயோசிஸ்.

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கர்ப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடியவில்லை. அதனால்தான் இந்த பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பெரிதாகிறது. மாதவிடாயின் போது கடுமையான  வலியும் இருக்கும்.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது.

கர்ப்பப்பையின் லைனிங்கான எண்டோமெட்ரியம் பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு டி அண்ட் சி செய்து பார்க்கலாம். மேற்கூடிய பிரச்னைகளை எல்லாம் பார்த்துவிட்டு  உங்கள் மருத்துவர் கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுக்கிறாரா எனப் பாருங்கள்.

கர்ப்பப்பையோடு  ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் இளம் வயதில் அகற்ற மாட்டோம். அந்த சினைப்பைகள்தான் பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை கொடுப்பவை. மெனோபாஸ் வயதுவரை சினைப்பைகளிலிருந்து ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். எனவே, சினைப்பைகளில் எந்தப்  பிரச்னையும் இல்லாதபட்சத்தில் அவற்றை விட்டுவிட்டு, கர்ப்பப்பையை மட்டும் நீக்கிக்கொள்ளலாம்.

கர்ப்பப்பையை அகற்றுவது அவசியமா என்பது குறித்து நீங்கள் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளுடன் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்டு, பிறகு முடிவு செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *